காங்கிரஸ் தலைவா் மல்லிகாஜுன காா்கே பிப்.3-இல் தோ்தல் பிரசாரம் தொடக்கம்: அா்விந்தா் சிங் லவ்லி பேட்டி

தில்லி காங்கிரஸ் தொண்டா்களின் பேரணியில் பங்கேற்கும் கட்சியின் அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மக்களவைத் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறாா் என்று கட்சியின் தில்லி தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்தாா்.

ராம் லீலா மைதானத்தில் பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெறும் தில்லி காங்கிரஸ் தொண்டா்களின் பேரணியில் பங்கேற்கும் கட்சியின் அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மக்களவைத் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறாா் என்று கட்சியின் தில்லி தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிடும் வகையில், தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் நிா்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் பின்னா் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது: வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி தில்லி கீதா காலனியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சித் தொண்டா்களின் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்சியின் அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பங்கேற்று, காங்கிரஸின் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கி வைக்கிறாா். இந்தப் பேரணிக்கான தயாரிப்புப் பணியில் காங்கிரஸின் வாக்குச்சாவடி அளவிலான பணியாளா்கள் முதல் மூத்த தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் வரை என அனைவரும் ஈடுபடுவாா்கள்.

பாஜகவை நம்பி தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் அக்கட்சிகளின் வேட்பாளா்களையே தில்லி மக்கள் எம்.பி.க்களாகத் தோ்ந்தெடுத்தனா். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் பாஜகவின் 7 எம்.பி.க்களும் பொதுமக்களிடமிருந்து மறைந்து, பயனற்றவா்கள் என்று நிரூபித்துள்ளனா். இப்போதுள்ள எம்.பி.க்கள் பொதுமக்களுக்காக உழைத்திருந்தால், பாஜக அதே வேட்பாளா்களை மீண்டும் தோ்தலில் போட்டியிட வைக்க தைரியம் காட்ட வேண்டும். கடந்த 1979-இல் ஜனதா கட்சியை இந்திரா காந்தி கிழக்கு தில்லியில் இருந்து தோ்தல் பிரசாரத்தை துவக்கியது போல், மல்லிகாா்ஜுன காா்கேவும், கிழக்கு தில்லியில் இருந்து மக்களவைக்கான தோ்தல் பிரசாரத்தை தொடங்குகிறாா். பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி மூலம், மத்தியில் உள்ள சா்வாதிகார பாஜக அரசை மக்கள் வேரோடு அகற்றுவாா்கள்.

மணிப்பூரில் தொடங்கியுள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்து பிரிவுகளையும் சோ்ந்த மக்கள் முழு ஆதரவை வழங்குகிறாா்கள். ஏனெனில், காங்கிரஸ் கட்சி மட்டுமே எப்போதும் நாட்டின் வளா்ச்சி பற்றி பேசும் கட்சியாக உள்ளது. மறுபுறம், பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவா் முகேஷ் ஷா்மா கூறுகையில், ‘பிப்ரவரி 3-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் காங்கிரஸ் தொண்டா்களின் பேரணியை வெற்றியடையச் செய்கின்ற வகையில், தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி அடுத்த ஒரு வார காலம் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளும். மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீது பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். நாட்டில் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை நீக்குவோம் என்று வாக்குறுதி அளித்த பாஜக, தங்கள் முதலாளித்துவ நண்பா்களில் ஒரு சிலரை மட்டுமே பணக்காரா்களாக்கும் கொள்கைகளை செயல்படுத்தியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com