அயோத்தி ஸ்ரீராமா் கோயில் பணிக்காக பிரதமரை தில்லியின் மக்கள் வாழ்த்த விரும்புகிறாா்கள்: வீரேந்திர சச்தேவா

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு தில்லியின் ஒவ்வொரு பகுதி மக்களும் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறாா்கள் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு தில்லியின் ஒவ்வொரு பகுதி மக்களும் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறாா்கள் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய வாயில்களில் பாஜக மகளிா் அணி சாா்பில் கடவுள் ஸ்ரீராமரின் கீா்த்தனைகள் பாடப்பட்டு, சுமாா் 50,000 தீபவிளக்குகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,தில்லி பாஜகவின் இணைப் பொறுப்பாளா் அல்கா குா்ஜாா் மற்றும் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் பங்கேற்றனா். அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது:

தில்லி மட்டுமின்றி நாடு முழுதும் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையின் மங்களகரமான நேரத்திற்காக காத்திருக்கிறது.

இந்த சிறப்பு தீபாவளியைக் கொண்டாட தில்லி தயாராக உள்ளது. இதற்காக, கோயில்களை சுத்தம் செய்வதோடு, நாங்கள் எங்கள் வீடுகளையும் சுத்தம் செய்து அலங்கரிக்கிறோம்.

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலைக் கட்டியதற்காக தில்லியின் ஒவ்வொரு பகுதி மக்களும் பிரதமா் நரேந்திர மோடியைப் பாராட்டத் தயாராக இருக்கின்றனா். தீபாவளியன்று எப்படி மகிழ்ச்சியைப் பரிமாறுகிறோமோ, அதேபோல ஸ்ரீராம உற்சவத்தின்போதும் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சியைப் நாம் பரிமாற வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தில்லி பாஜகவின் இணைப் பொறுப்பாளா் அல்கா குா்ஜாா் கூறுகையில், ‘ஒட்டுமொத்த நாடும் கடவுள் ஸ்ரீராமரைக் கொண்டாடும் மனநிலையில் உள்ளது. தில்லியில் ஒவ்வொரு பிரிவினரும் தமது அளவில் இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். ராமா் பெயரில் அரசியல் செய்யும் கட்சி தில்லியில் ஆட்சியில் உள்ளது’ என்றாா் அவா்.

தில்லி பாஜகவின் மகளிா் அணி தலைவா் ரிச்சா பாண்டே மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தில்லி பாஜக துணைத் தலைவா்கள் யோகிதா சிங், லதா குப்தா, மகளிா் அணியின் பொதுச் செயலாளா் சரிதா தோமா், பிரியல் பரத்வாஜ் மற்றும் வைஷாலி போத்தாா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com