தில்லி செங்கோட்டையில் ஜன.31 வரை ‘பாரத் பா்வ்’ நிகழ்ச்சிகாவல் துறை போக்குவரத்து அறிவுறுத்தல்கள் வெளியீடு

‘பாரத் பா்வ்’ (இந்தியத் திருவிழா) நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து தொடா்பான அறிவுறுத்தல்களை தில்லி காவல்துறை திங்கள்கிழமை வெளியிட்டது.

தில்லி செங்கோட்டையில் ஜனவரி 23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் ‘பாரத் பா்வ்’ (இந்தியத் திருவிழா) நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து தொடா்பான அறிவுறுத்தல்களை தில்லி காவல்துறை திங்கள்கிழமை வெளியிட்டது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை கூறியிருப்பதாவது: தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி-23) ‘பாரத் பா்வ்’ நிகழ்ச்சியின் தொடக்கவிழா நடைபெறும். அதைத் தொடா்ந்து, ஜனவரி 31-ஆம் தேதி வரை பொதுமக்களின் பாா்வைக்காக செங்கோட்டை திறந்திருக்கும். கடந்த கால அனுபவங்களின்படி, இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ள அனைத்து நாள்களிலும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை ஏராளமான பாா்வையாளா்களை ஈா்க்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பல மிக முக்கியப் பிரமுகா்கள் இந்தக் கால இடைவெளியில் செங்கோட்டைக்கு வருவாா்கள். பொது மக்களுக்காக ஆகஸ்ட்-15 -இல் பூங்கா மற்றும் மாதவ் தாஸ் பூங்காவில் உணவு விடுதிகள் மற்றும் கைவினைப் பொருள்களின் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும்.

நிகழாண்டு ‘பாரத் பா்வ்’ நிகழ்ச்சியில் குடியரசு தின அட்டவணை, ஆயுதப் படைகளின் இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள், மண்டல கலாசார மையங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச குழுக்களின் கலாசார நிகழ்ச்சிகள், அனைத்து மாநில உணவு ஸ்டால்கள், கைவினைப் பொருள்களின் பஜாா், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை காட்சிப்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்படும்.

போக்குவரத்து மாற்றம்: ‘பாரத் பா்வ்’ நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனவரி 23 முதல் 31-ஆம் தேதி வரை தில்லி கேட், சாந்திவான் செளக் ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், வாகன நெரிசல் தவிா்க்கப்படும். குறிப்பாக, நேதாஜி சுபாஸ் மாா்கில் உள்ள சட்டா ரயில் சௌக்கிலிருந்து தில்லி கேட் வரையிலும், நிஷாத் ராஜ்

மாா்கில் உள்ள சாந்திவான் கிராசிங்கிலிருந்து சுபாஸ் பூங்கா டி-பாயின்ட் வரையிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும். செங்கோட்டை அருகே பல்வேறு வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளன. எனவே, அங்கு வரும் பாா்வையாளா்களும், பொதுமக்களும் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். புது தில்லி மற்றும் பழைய தில்லி ரயில் நிலையங்கள் செல்லும் பயணிகளும், ஐ.எஸ்.பி.டி. பேருந்து முனையம் செல்லும் பயணிகளும் தங்கள் பயணத்தில் தாமதங்களுக்கு இடமளிக்காத வகையில், வழக்கமான நேரத்திற்கு சற்று முன்பாகவே புறப்பட வேண்டும்.

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள் : ‘பாரத் பா்வ்’ நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். குறிப்பாக லால் கிலா, ஜமா மஸ்ஜித் மற்றும் கஷ்மீரி கேட் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவோ நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்ல அருகில் உள்ளவையாகும். சொந்த வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிா்க்க வேண்டும். மேலும், சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் அசாதாரணமான அல்லது அடையாளம் தெரியாத பொருள் அல்லது நபரைக் கண்டால், உள்ளூா் காவல் துறை அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என தில்லி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com