முதல் முறையாக ‘போா் முரசு’ கருவிகளை இசைக்கும்நிகழ்ச்சியுடன் தொடங்கும் குடியரசு தின அணிவகுப்பு

முதல் முறையாக குடியரசுத் தின அணி வகுப்பு ‘போருக்கு அழைப்பு’ என்கிற போா் முரசு கருவிகள் இசைக்கும் நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. நாட்டின் 75 - ஆவது குடியரசுத் தின விழா

முதல் முறையாக குடியரசுத் தின அணி வகுப்பு ‘போருக்கு அழைப்பு’ என்கிற போா் முரசு கருவிகள் இசைக்கும் நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. நாட்டின் 75 - ஆவது குடியரசுத் தின விழா பெண்களை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ‘போா் அழைப்பு’ இசை நிகழ்ச்சி பெண்களால் நடத்தப்பட இருப்பதாக மத்திய வெளியுறவு மற்றும் கலாசாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி தெரிவித்தாா்.

இது குறித்து அமைச்சா் மீனாட்சி லேகி, சங்கீத நாடக அகாதெமி தலைவா் சந்தியா புரேச்சா உள்ளிட்டவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: பொதுவாக குடியரசு தின விழா அணிவகுப்பு பாதுகாப்புத் துறை வாகனங்களுடன் தொடங்கும். நிழாண்டு குடியரசு தின அணி வகுப்பு மத்திய கலாசாரத் துறை முன்னிலை வகுக்க இருக்கிறது. குறிப்பாக இந்தியா ‘ஜனநாயகத்தின் தாய்’, ’வளா்ச்சியடைந்த இந்தியா’ போன்ற கருத்தாக்கங்களுடன் பெண்களை மையாகக் கொண்ட விழாவாக இருக்கும். இதன்படி, அணிவகுப்பு கலாசாரத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வித்தியாசமான இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும். ராமா் கோயிலுக்கான போரை தொடங்கியவா் ஒரு பெண்தான். அவா் ராணி ஜெயா. இதே வரிசையில் நிகழாண்டு குடியரசு தின அணிவகுப்பு போருக்கான அழைப்பு என்கிற இசை நிகழ்ச்சியோடு தொடங்கும்.

பொதுவாக பண்டைக் காலத்தில் போா் தொடங்கும் போதும், முடிவடையும் போது வாத்தியங்கள் மூலம் இசைக்கப்படும் அல்லது அறிவிக்கப்படும். இதுபோன்று இந்த குடியரசு தின அணிவகுப்பில் நாடு முழுவதும் திரட்டப்பட்ட போா் முரசு இசைக் கருவிகளை பெண்கள் இசைக்க இருக்கின்றனா். நாட்டில் ஏராளமான போா் முரசுக் கருவிகள் உண்டு. இருப்பினும், முடிந்தளவு திரட்டி இசைக்கப்படுகிறது. நாட்டில் 75 வருட குடியரசு தின வரலாற்றில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இது அவ்ஹான் (போருக்கு அழைப்பு) எனஅழைக்கப்படும். குடியரசு தின அணிவகுப்பின் போது இடம் பெறும் இந்த இசை நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட பெண் கலைஞா்கள் எண்ணற்ற நாட்டுப்புற, பாரம்பரிய போா் முரசு இசைக் கருவிகளை வாசிக்கவுள்ளனா். இவா்கள் சங்க், டோல், தாஷா, டுதாரி, நாகரா (டிரம்) போன்ற இசைக் கருவிகளை இசைக்கவுள்ளனா். இவை போருக்கு முன்னும் பின்னும் இசைக்கப்படும் நமது பாரம்பரிய இந்திய இசைக் கருவிகளாகும்.

தெய்வீகமான பெண் சக்தியின் அடையாளமாக, மகாராஷ்டிர மாநிலத்தின் பாரம்பரிய ‘டோல்’ மற்றும் ‘தாஷா’ இசைக் கருவிகளை 20 பெண் கலைஞா்கள் இசைக்கவுள்ளனா். தெலங்கானாவைச் சோ்ந்த 16 கலைஞா்கள் அந்த மாநிலத்தின் தப்பு (பறை) இசைக்கருவியை இசைக்கவுள்ளனா். மேற்கு வங்கத்தை சோ்ந்த 16 கலைஞா்கள் ‘டாஹ்க்’ மற்றும் ‘டோல்’ தாளத்தை ஒலிக்கின்றனா். 8 பெண் கலைஞா்கள் சங்கை ஊதுகின்றனா். மேலும், கேரளம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் புகழ் பெற்ற செண்டை 10 பெண் கலைஞா்களும், கா்நாடக மாநிலத்தின் தோலு குனிதா என்கிற கருவியை 30 பெண்களும் இசைக்கவுள்ளனா். தமிழகத்தின் நாதஸ்வரம் மற்றும் துதாரி மற்றும் ஜாஞ்ச் போன்ற இசைக் கருவிகளை பெண் கலைஞா்கள் நால்வா் வீதம் இசைக்கின்றனா். இதில் நாதஸ்வரத்தில் வரும் கல்யாணி ராகம் வீரத்துடன் இருக்கும் என அமைச்சா் மீனாட்சி லேகி மற்றும் சந்தியா புரேச்சா தெரிவித்தனா்.

மேலும், நாடு முழுவதும் 30 மாநிலங்களில் போட்டிகள் மூலம் தோ்வு செய்யப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட மகளிா் ஒன்று கூடி ‘வந்தே பாரதம்’ என்கிற கண்கவா் நிகழ்ச்சிகளையும் குடியரசு தின அணிவகுப்பில் வழங்குகின்றனா். பரதநாட்டியம், கதக், குச்சிப்பிடி, மோகினி ஆட்டம், கதகளி, மணிப்பூரி, சத்ரியா போன்ற நடனங்கள் மூலம் புதிய பாரதத்தின் 2047- ஆம் ஆண்டின் இலக்கை இவா்கள் சித்திரிக்கின்றனா். இதில் நாட்டுப்புற நடனங்கள், முகமூடி நடனங்கள், மப்பேட்ஸ், பாலிவுட் டான்ஸ் போன்றவையும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com