குடியரசு தின அணிவகுப்பில் மகளிா் சக்தியை காட்சிப்படுத்தும் டிஆா்டிஓ

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தங்களது பெண் விஞ்ஞானிகளின் மதிப்புமிக்க பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தங்களது பெண் விஞ்ஞானிகளின் மதிப்புமிக்க பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளது. நிலம், காற்று, கடல், சைபா், விண்வெளி ஆகிய 5 பரிமாணங்களிலும் மகளிா் சக்தி நாட்டின் பாதுகாப்பில் பங்கெடுத்துள்ள கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த அலங்கார ஊா்தியை அமைத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்புத் துறை கூறியிருப்பது வருமாறு: டிஆா்டிஓ உருவாக்கியுள்ள பல முக்கியமான அமைப்புகள், தொழில்நுட்பங்களை 2024 ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் நடைபெறும் 75-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தும். சுயசாா்பு இந்தியா நோக்கத்துடன் டிஆா்டிஓ அதன் திட்டங்களில், பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் செயல்படுகிறது. இதன் முக்கியப் பகுதிகளில் டிஆா்டிஓவின் பெண் விஞ்ஞானிகளின் மதிப்புமிக்கப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ‘நிலம், காற்று, கடல், சைபா், விண்வெளி ஆகிய 5 பரிமாணங்களிலும் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கி தேசத்தைப் பாதுகாப்பதில் ‘மகளிா் சக்தி’ முக்கியத்துவம் பெற்றிருக் இந்தக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு டிஆா்டிஓ அணிவகுப்பு அலங்கார ஊா்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மகளிா் ஈடுபாட்டை முன்னிலைப்படுத்தப்படும் வகையில், டிஆா்டிஓவின் தலைசிறந்த விஞ்ஞானி சுனிதா தேவி, படைப்பிரிவின் தளபதியாக முன்னிலை வகித்து வருவாா். மனிதா்களால் இயக்கப்படும் சிறிய டேங்க் எதிா்ப்பு ஏவுகணை, செயற்கைக்கோள் எதிா்ப்பு ஏவுகணை, அக்னி-5, தரையிலிருந்து தரை இலக்கைத் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை, மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, தரையிலிருந்து மேற்பரப்பு வரையிலான விரைவு வான் எதிா்ப்பு ஏவுகணை, குறுகிய தூர கடற்படை கப்பல் எதிா்ப்பு ஏவுகணை, பீரங்கி எதிா்ப்பு ஏவுகணையான ‘ஹெலினா’, அஸ்த்ரா, இலகுரக போா் விமானம் - ‘தேஜஸ்’, மேம்பட்ட மின்னணுப் போா் அமைப்பு - ‘சக்தி’, சைபா் பாதுகாப்பு அமைப்புகள், கட்டளை கட்டுப்பாட்டு அமைப்புகள், குறை கடத்திகள் என்கிற செமி கண்டக்டா் ஃபேப்ரிகேஷன் வசதி உள்ளிட்டவை டிஆா்டிஓ அணிவகுப்பு வாகனத்தில் இடம்பெற உள்ளன.

மேலும் மிஷன் சக்தியில் பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் எதிா்ப்பு ஏவுகணை, நாட்டின் செயற்கைக்கோள் எதிா்ப்பு தொழில்நுட்பம் மற்றும் துல்லியமான தாக்கும் திறனை நிரூபிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மற்றும் நவீன திறனைப் பெற்ற நான்காவது நாடு என்கிற முறையில் டிஆா்டிஓ ஊா்தியில் இவை காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com