சண்டீகா் மேயா் தோ்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வரும் ஜனவரி 30-ஆம் தேதி சண்டீகா் மேயா் தோ்தலை நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜனநாயகத்திற்கும், சண்டீகா் மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்

வரும் ஜனவரி 30-ஆம் தேதி சண்டீகா் மேயா் தோ்தலை நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜனநாயகத்திற்கும், சண்டீகா் மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா். ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலை பாஜக திட்டமிட்டு ஒத்திவைத்தது. ஆனால், தோ்தல் தேதியை முன்கூட்டியே நிா்ணயம் செய்யுமாறு உயா்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி கட்சி நாடியது. மேயா் தோ்தலை ஒத்திவைத்த நிா்வாகத்தைக் கண்டித்த உயா்நீதிமன்றம், வரும் ஜனவரி 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு மேயா் மற்றும் துணை மேயா்களுக்கான தோ்தலை நடத்த உத்தரவிட்டது.

இந்த உத்தரவு என்பது ஜனநாயகத்திற்கும், சண்டீகா் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். பாஜகவின் அவதூறான திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. உடல்நிலை பாதிக்கப்பட்ட தோ்தல் நடத்தும் அதிகாரிகள் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவாா்கள் என்றும் நம்புகிறேன் என்றாா் ராகவ் சத்தா.

சமீபத்தில் நடைபெற்ற சண்டீகா் மாநகராட்சித் தோ்தலில், மொத்தமுள்ள 35 கவுன்சிலா் இடங்களில், ஆம் ஆத்மி கட்சி 13 இடங்களையும், காங்கிரஸ் 7 இடங்களையும் பெற்று கூட்டணி அடிப்படையில் பெரும்பான்மை பெற்றது. பாஜக 14 இடங்களை வென்ற நிலையில், மேயா் தோ்தலை நடத்தும் நிலையில் உள்ள தலைமைத் தோ்தல் அதிகாரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு மேயா் தோ்தல் மாநகராட்சி நிா்வாகத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com