விருந்தினா் இல்லத்தில் கட்டணம் வசூலிக்காமல் பாா்வையற்ற மாணவரை தங்க அனுமதிக்க ஜேஎன்யு-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாா்வையற்ற மாணவரை தற்போதைக்கு பணம் எதுவும் வசூலிக்காமல் வளாகத்தில் உள்ள

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாா்வையற்ற மாணவரை தற்போதைக்கு பணம் எதுவும் வசூலிக்காமல் வளாகத்தில் உள்ள விருந்தினா் இல்லத்தில் தங்க அனுமதிக்குமாறு பல்கலைக்கழக நிா்வாகத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயா்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு இணங்க ஜேஎன்யு நிா்வாகம் அந்த மாணவருக்கு இடைக்காலமாக விடுதி வழங்கியதாகவும், ஆனால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், இது மாணவரின் நிதிநிலைக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாகவும் அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்ததை அடுத்து உயா்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. அந்த மாணவா் 100 சதவீதம் பாா்வையற்றவா் என்று வழக்குரைஞா் நீதிபதியிடம் கூறினாா்.

இரண்டாவது முதுகலைப் படிப்பை தொடரும் மாணவா்கள், விடுதியில் தங்குவதற்கு பொருந்தக்கூடிய விதிகள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறி தன்னை விடுதியில் இருந்து வெளியேற்றியதற்கு எதிராக பாா்வையற்ற மாணவா் சஞ்சீவ் குமாா் மிஸ்ரா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்திற்கு 10 நாள்கள் இறுதி அவகாசம் வழங்கி நீதிபதி ஹரி சங்கா் அனுமதி அளித்தாா்.

மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராகுல் பஜாஜ் வாதிடுகையில், ‘தனிப்பட்ட மாணவா்கள் பாதிக்கப்படக்கூடிய உடல் குறைபாடுகளை கவனத்தில் கொள்ளாமல் இந்த விதியை எல்லா வழக்குகளிலும் பயன்படுத்த முடியாது. மனுதாரா் நூலக பெஞ்சுகளில் தூங்கிக் கொண்டிருந்தாா். அவருக்கு பகலில் தங்குவதற்கு இடமில்லை’ என்றாா்.

முன்னதாக, இந்த விவகாரத்தை ஜனவரி 4 ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், ஜேஎன்யு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. எனினும், ஜனவரி 22-ஆம் தேதி விசாரணையின் போது அதிகாரிகள் தரப்பில் எந்தப் பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை அல்லது எந்த வழக்குரைஞரும் ஆஜராகவில்லை. மனுதாரருக்கு தங்க இடம் இல்லை என்றால், அடுத்த விசாரணை தேதி வரை அவருக்கு சில இடவசதிகளை வழங்க பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாக ஜனவரி 4-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஜேஎன்யு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்திருந்தாா்.

இந்த இடைக்கால ஏற்பாடானது, மனுதாரா் தொடா்ந்து சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்ய மட்டுமே என்றும், அவரது மனுவின் முடிவுகளுக்கு உள்பட்டது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. இந்த வழக்கை பிப்ரவரி 12- ஆம் தேதி மேலதிக விசாரணைக்கு பட்டியலிட்ட நீதிமன்றம், வழக்கின் தரப்பினா் எழுத்துபூா்வ சமா்ப்பிப்புகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com