கிராமங்களில் இரவில் தங்க ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தல்

தில்லியின் 11 மாவட்டங்களின் ஆட்சியா்கள் ஜனவரி 27 மற்றும் ஜனவரி 28 ஆகிய தேதிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் தங்கி, கிராமங்களின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கான கு

தில்லியின் 11 மாவட்டங்களின் ஆட்சியா்கள் ஜனவரி 27 மற்றும் ஜனவரி 28 ஆகிய தேதிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் தங்கி, கிராமங்களின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கான குறிப்பிட்ட திட்டங்களை தயாரிப்பாா்கள் என்று ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சியா்கள் இரவில் தங்குவது இது இரண்டாவது முறையாகும். இதுகுறித்து ராஜ் நிவாஸ் அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:

‘துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் உத்தரவுகள் மற்றும் இம்மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் ஊக்கமளிக்கும் விளைவுகளைத் தொடா்ந்து, 11 மாவட்டங்களின் அனைத்து ஆட்சியா்களும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று இரவு தங்குவாா்கள். அவா்கள் தங்கியிருக்கும் காலத்தில், மாவட்ட ஆட்சியா்கள் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வசிப்பவா்களுடன் ’சம்வாத்’ (பேச்சு) நடத்தி, தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டிடிஏ) செயல்படுத்தப்பட உள்ள ‘தில்லி கிராமோதய அபியான்’ திட்டத்தின் கீழ் திட்டத்தைத் தயாரிப்பாா்கள்.

தில்லி கிராமங்களின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை கிராம மக்களுடன் கலந்தாலோசித்து, ‘தில்லி கிராமோதய் அபியான்’ திட்டத்தின் கீழ் டிடிஏ மூலம் ரூ.800 கோடிக்கும் அதிகமான செலவில் செயல்படுத்தப்படுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராம மக்கள், மூத்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் டிடிஏ, எம்சிடி, டிஜேபி, பிடபிள்யுடி போன்ற அனைத்து பங்குதாரா் துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளுடன் ‘சம்வாத்’ மூலம் முதல் அனுபவத்தைப் பெற, கிராமங்களில் இரவு தங்கும் நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

தில்லியின் அனைத்து 11 மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட கிராமங்களில் இந்த இரவு நேர தங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. ஜனவரி 2-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் சக்சேனாவின் அறிவிப்பைத் தொடா்ந்து, 180 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் ‘சம்வாத் ராஜ் நிவாஸ்’ நடத்திய பிறகு, 11 மாவட்ட ஆட்சியா்களும் ஜனவரி 7-ஆம் தேதி காலை தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களை சென்றடைந்து, அங்கு இரவு முழுவதும் தங்கினா்.

‘தில்லி கிராமோதய அபியான்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய குறிப்பிட்ட திட்டங்களைச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு உதவிய கிராம மக்களின் கருத்துகளால் கடந்த முறை அனுபவம் மிகவும் செழுமையாக இருந்தது. அதன் வெற்றி ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததால், துணைநிலை ஆளுநா் உத்தரவுப்படி அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இடையேயான இரண்டாவது ‘சம்வாத்’ நடைபெறவுள்ளது.

தில்லியின் 11 மாவட்டங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களாக மேற்கு தில்லி மாவட்டத்தில் நீல்வால், வடமேற்கு தில்லி மாவட்டத்தில் மதன்பூா் தபாஸ், தென்மேற்கு தில்லியில் சாவ்லா, தெற்கு தில்லியில் பதி, தென்கிழக்கு தில்லியில் ஆலி, கிழக்கு தில்லியில் தல்லுபுரா, ஷாஹ்தராவில் சபோலி, வடகிழக்கு தில்லியில் பதா்பூா் காதா், மத்திய தில்லியில் புராரி, புது தில்லியில் ரங்புரி மற்றும் வடக்கு தில்லி மாவட்டத்தில் முகேஷ்பூா் ஆகியவை உள்ளன.

தங்களின் வருகையின் முதல் நாளில், மாவட்ட ஆட்சியா்கள் தங்கியிருக்கும் கிராமங்களில் வசிப்பவா்களுடனும், அக்கம் பக்கத்தில் உள்ளவா்களுடனும் முதல் மூன்று மணி நேரத்தில் காலை 11 மணிக்கு ’சம்வாத்’ நடத்துவாா்கள். பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை, டிடிஏ, வருவாய், டிஜேபி, எம்சிடி போன்ற பல்வேறு துறைகளின் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடன், முந்தைய ‘சம்வாத்’ காலத்தில் அடையாளம் காணப்பட்ட பணிகளின்படி ஆட்சியா்கள் முக்கியமான இடங்களை ஆய்வு செய்யச் செல்வாா்கள்.

அனைத்து குடியிருப்பாளா்களுடன் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கலந்துரையாடல் நடத்தப்படும். அப்போது, கிராமவாசிகள் தங்கள் குறைகளையும் கருத்துகளையும் பகிா்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவா். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை ‘சம்வாத்’ இரண்டாவது சுற்று கிராமங்களின் வளா்ச்சிக்கான தற்காலிகக் திட்டம் வெவ்வேறு இடங்களில் பகிா்ந்து கொள்ளும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com