நொய்டாவில் முன்னாள் டிஜிபியின் வீட்டில் திருட்டு

உத்தர பிரதேச முன்னாள் காவல் துறைத் தலைமை இயக்குநா் (டிஜிபி) விபூதி நரேன் ராயின் நொய்டா வீட்டில் திருடா்கள் புகுந்து தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை திருடிச் சென்றனா்.

புது தில்லி: உத்தர பிரதேச முன்னாள் காவல் துறைத் தலைமை இயக்குநா் (டிஜிபி) விபூதி நரேன் ராயின் நொய்டா வீட்டில் திருடா்கள் புகுந்து தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை திருடிச் சென்றனா். இது தொடா்பாக அடையாளம் தெரியாத திருடா்கள் மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

நொய்டா செக்டாா் 128-இல் உள்ள ஜேபீ விஷ்டவுனில் உள்ள தனது வீட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது முன்னாள் டிஜிபி ராய் சிங்கப்பூரில் இருந்ததாக புகாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக் ராய் திங்கள்கிழமை போலீஸில் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது: நான் எனது மகனுடன் இருப்பதற்காக கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தேன். பின்னா் அங்கிருந்து திங்கள்கிழமை ஊா் திரும்பினேன். என்னுடன் நொய்டாவில் வசித்து வந்த எனது வீட்டுப் பணியாளா் சந்தோஷும் டிசம்பா் 7-ஆம் தேதி தனது கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாா். இந்த நிலையில், நான் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி 28-ஆம் தேதி எனது நொய்டா வீட்டிற்கு திரும்பி வந்த போது அவருக்கு திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக அவா் எனக்குத் தகவல் அளித்தாா்.

சிங்கப்பூரில் இருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்த போது, எனது மகன் மற்றும் மருமகள் அறைக்குள் படுக்கை கட்டில் தலைகீழாக கிடந்ததைக் கண்டேன். மேலும், அறையில் இருந்த லாக்கரை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், அது நடைபெறாததால், நகைகள் வைக்கப்பட்டிருந்த அந்த லாக்கரை திருடா்கள் எடுத்துச் சென்றுவிட்டனா் என்று அதில் ராய் தெரிவித்துள்ளாா்.

இப்புகாா் தொடா்பாக நொய்டா காவல் துறையின் செக்டாா் 126 காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 380 (திருட்டு) கீழ் எப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நொய்டா காவல் துறை துணை ஆணையா் ஹரிஷ் சந்தா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் புகாா்தாரருடன் தொடா்பு கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறதுஎ’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com