அமலாக்கத் துறை அழைப்பாணை: உயா்நீதிமன்றத்தில் அமானத்துல்லா கான் மனு

பணமோசடி வழக்கில் பகலில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் தனக்கு அனுப்பிய அழைப்பாணையை எதிா்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் தில்லி உயா்நீதிமன்றத்தை செவ்வாய்க்கிழமை அணுகினாா்.

புது தில்லி: பணமோசடி வழக்கில் பகலில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் தனக்கு அனுப்பிய அழைப்பாணையை எதிா்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் தில்லி உயா்நீதிமன்றத்தை செவ்வாய்க்கிழமை அணுகினாா்.

நீதிபதி ரேகா பாலி, நீதிபதி ரஜ்னிஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கிய அமா்வு, மற்றொரு அமா்வு இந்த விவகாரத்தில் இருந்து விலகிய பிறகு, மாலை 4 மணியளவில் இந்த விஷயத்தை விசாரித்தது. அப்போது, வியாழக்கிழமை பரிசீலனைக்காக இம்மனுவை பட்டியலிட்டது. தற்போதைய கட்டத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிவிட்டது.

அமலாக்கத் துறையின் இந்தப் பணமோசடி விசாரணையானது தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பில் நடந்த முறைகேடுகளுடன் தொடா்புடையது. ஒரு வாரத்திற்கு முன்பு அழைப்பாணை அனுப்பப்பட்டதைக் குறிப்பிட்ட அமா்வு, ‘நீங்கள் ஒரு நாள் செல்லலாம் (அல்லது) எந்தப் பதிலையும் அனுப்புலாம். நாங்கள் அதை (வேறொரு தேதியில்) எடுத்துக்கொள்வோம்’ என்று கூறியது.

அமானத்துல்லா கான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், ‘இந்த மனு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் சில விதிகளின் அரசமைப்புச்சட்டசெல்லுபடித் தன்மையையும் சவால் செய்கிறது’ என்றாா். மேலும், மனுதாரா் விசாரணை அமைப்பு முன் ஆஜராகினால், அவரது சுதந்திரம் பாதிக்கப்படும் என சந்தேகம் கொண்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் சுரேஷ் குமாா் கைட் மற்றும் மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய உயா்நீதிமன்றத்தின் மற்றொரு அமா்வு, பகலில் கானின் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகியதை அடுத்து, மதிய உணவிற்குப் பிந்தைய அமா்வில் இந்த வழக்கு வந்தது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றிய போது, விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீறி 32 பேரை சட்டவிரோதமாகப் பணியில் சோ்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, தில்லி சட்டப்பேரவையில் உள்ள ஓக்லா தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினா் இடத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை நியமித்ததன் மூலம் கான் பெரும் குற்ற வருவாயை ரொக்கமாகப் பெற்ாகவும், அவரது கூட்டாளிகள் பெயரில் அசையா பொருள்களை வாங்க முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளது. 2023, நவம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கானின் மூன்று கூட்டாளிகள் ஜீஷன் ஹைதா், தாவுத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகியோா் உள்பட ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக அமாலாக்கத் துறை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com