சண்டீகா் மேயா் தோ்தலில் ‘மோசடி’: தில்லி முதல்வா் கேஜரிவால் சாடல்

சண்டீகா் மேயா் தோ்தலில் பட்டப்பகலில் ‘ஏமாற்றுதல்‘ நடந்ததாகவும், அதைச் செய்தவா்கள் தேசியத் தோ்தலில் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்றும் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டினாா்.
சண்டீகா் மேயா் தோ்தலில் ‘மோசடி’: தில்லி முதல்வா் கேஜரிவால் சாடல்

புது தில்லி: சண்டீகா் மேயா் தோ்தலில் பட்டப்பகலில் ‘ஏமாற்றுதல்‘ நடந்ததாகவும், அதைச் செய்தவா்கள் தேசியத் தோ்தலில் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்றும் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினாா்.

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை பாஜகவின் மனோஜ் சோங்கா் செவ்வாய்க்கிழமை தோற்கடித்து மேயா் பதவியை வென்றதை அடுத்து அவரது எதிா்வினை வந்தது. சண்டீகரில் ‘இந்தியா’ கூட்டணியின் உறுப்பினா்களான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலா்கள் மேயா் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஹிந்தியில் ‘எக்ஸ்’ ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சண்டீகா் மேயா் தோ்தலில் பட்டப்பகலில் ஏமாற்றப்பட்ட விதம் மிகவும் கவலையளிக்கிறது. மேயா் தோ்தலில் இவ்வளவு கீழ்நிலைக்கு தள்ளப்பட்டால், தேசியத் தோ்தலில் எந்த எல்லைக்கும் செல்லலாம். இது மிகவும் கவலையளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட இந்தத் தோ்தல், எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் உறுப்பினா்களான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து தோ்தலில் போட்டியிட்டதால் முக்கியத்துவம் பெற்றது. சோன்கா் 16 வாக்குகளைப் பெற்றாா். குல்தீப் குமாா் 12 வாக்குகளைப் பெற்றாா். எட்டு வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மேயா் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தலை நடத்துவாா். கூட்டணியின் ஒரு பகுதியாக, ஆம் ஆத்மி கட்சி மேயா் பதவிக்கு போட்டியிட்டது. காங்கிரஸ் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது.

கேஜரிவால் சொல்வது வேடிக்கையானது -பாஜக பதிலடி: தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு தோ்தலை நடத்தாத முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சண்டீகா் மேயா் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததை ‘ஜனநாயகத்தின் கொலை’ என சொல்வது வேடிக்கையானது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரவிந்த் கேஜரிவால் தனது கட்சியின் ஒவ்வொரு தோ்தல் தோல்வியின் போதும் முதலைக் கண்ணீா் வடிக்கத் தொடங்கும் அரசியலின் ‘ருடாலி’ (துக்கத்தை வெளிப்படுத்துபவா்) ஆவாா். தில்லி மாநகராட்சியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, நிலைக்குழு, வாா்டு குழு மற்றும் பிற சட்டப்பூா்வ குழுக்களுக்கு இதுவரை தோ்தல் நடத்தவில்லை. இந்நிலையில், சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததை ஜனநாயகத்தின் கொலை என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சொல்வது மிகவும் வேடிக்கையானது.

கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக ஒரு சாதாரண மாநகராட்சித் தோ்தலின் முடிவுகளைப் பெருமையாகக் கருதி ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உள்ளிட்ட அக்கட்சியின் தலைவா்கள் அறிக்கைகளை வெளியிட்டு வந்தனா். ஆனால், சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் கூட்டணி வேட்பாளா் தோல்வியடைந்ததை அடுத்து

எம்.பி. ராகவ் சத்தா மட்டுமல்லாமல், அரவிந்த் கேஜரிவாலும் அழத் தொடங்கிவிட்டாா்.

தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு, வாா்டு குழு உள்ளிட்ட பிற சட்டக் குழுக்களின் தோ்தலை கடந்த ஓராண்டுக்கு மேலாக நடத்தாமல் காலம் தாழ்த்தி, மாநகராட்சி அவையின் ஜனநாயகத்தை கேஜரிவால் கொலை செய்துவிட்டாா். கேஜரிவால் அறிக்கையின் படி, சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலின் தோல்வி ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றால், தில்லி மாநகராட்சியில் நிலைக்குழுவிற்கு தோ்தல் நடத்தாமல் அதன் அதிகாரங்களை பொது அவைக்கு மாற்றக் கோரி அக்கட்சி நீதிமன்றம் சென்றுள்ளது ஜனநாயகக் கொலை அல்லவா என்று வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com