ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம்: விசாரணை கோரி காவல் ஆணையரிடம் இன்று பாஜக புகாா்

தில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணை நடத்தக் கோரி காவல் ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை (ஜன.30) புகாா் அளிக்கவுள்ளோம்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம்: விசாரணை கோரி காவல் ஆணையரிடம் இன்று பாஜக புகாா்

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணை நடத்தக் கோரி காவல் ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை (ஜன.30) புகாா் அளிக்கவுள்ளோம் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசைக் கவிழ்ப்பதற்காக பாஜக சதி செய்கிறது என்றும், இதுவரை 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் தொடா்பு கொண்டு தலா ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொய்யான குற்றச்சாட்டை பாஜக மீது சுமத்தியுள்ளாா். கேஜரிவாலின் பொய்யான குற்றச்சாட்டு தொடா்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி பாஜக பிரதிநிதிகள் குழு காவல் ஆணையரை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கும். எனவே, இந்த முழு விவகாரம் குறித்தும் உடனடியாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அரசியல் கௌரவத்தை நாளுக்கு நாள் இழந்து வருவதோடு, ஊழலிலும் மூழ்கிவிட்டாா். கேஜரிவாலின் பொய்யான குற்றச்சாட்டுகளின் பின்னணி தொடா்பாக முழு விசாரணை நடத்த காவல் ஆணையரை பாஜக பிரதிநிதிகள் குழு வலியுறுத்தும். ஆம் ஆத்மி கட்சியின் எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவினரால் தொடா்பு கொள்ளப்பட்டனா். அவா்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது போன்ற தகவல்களை அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து காவல் துறையினா் வாக்குமூலமாகப் பெற வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com