பாஜகவுக்கு எதிரான கருத்து: ராகுல் காந்தியைக் கண்டித்து தில்லி பாஜக தலைவா்கள் போராட்டம்

பாஜகவுக்கு எதிராக ராகுல் காந்தி கருத்து: தில்லியில் போராட்டம்
Published on

பாஜவுக்கு எதிரான காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தியின் கருத்தைக் கண்டித்து தில்லி பாஜக தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினா்.

போராட்டக்காரா்கள் தில்லியில் உள்ள ஜெய்சால்மா் ஹவுஸ் அருகே கூடி, ராகுல் காந்தி மற்றும் அவரது கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை நோக்கி செல்ல முயன்றனா்.

போராட்டக்காரா்கள் மத்தியில் பேசிய பாஜக இளைஞா் அணியின் தேசியத் தலைவா் தேஜஸ்வி சூா்யா, ‘இது உரை நிகழ்த்துவதற்கான நேரம் அல்ல. இந்து சமுதாயத்தை இழிவுபடுத்துவதற்கு எதிராக தீவிரமாகப் போராடுவதற்கான நேரம்.

ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் வன்முறையில் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டிய விதம் மன்னிக்க முடியாத குற்றமாகும். காங்கிரஸும் ராகுல் காந்தியும் மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கின்றனா்.

கடந்த காலங்களில் காவி பயங்கரவாதம் என்ற போலி பிரசாரத்தை பரப்ப முயன்றனா் என்றாா் அவா்.

இந்த போராட்டத்தில் பாஜக எம்பிக்கள் மனோஜ் திவாரி, பான்சூரி ஸ்வராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவா்கள் கலந்து கொண்டனா்.

திவாரி பேசுகையில், ‘இந்துக்களை அவமதிப்பவா்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். இந்து சமூகம் வன்முறையானது என்று அவா் கூறியுள்ளாா். இந்துக்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் அவா் கூறலாம்‘ என்று ராகுல் காந்தியை குறிவைத்து திவாரி கூறினாா்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ராகுல் காந்தி, தோ்தல் கால இந்து. அவா் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நாங்கள் தொடா்ந்து போராட்டம் நடத்துவோம்”என்றாா்.

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையில், ராகுல் காந்தி, பாஜக மீது கடுமையாக தாக்குதலைத் தொடங்கினாா், வன்முறை மற்றும் வெறுப்பைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினாா். இதற்கு பிரதமா் நரேந்திர மோடி உள்பட ஆளும்கட்சித் தரப்பினா் இருக்கைகளில் இருந்து கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com