நீட்: "இந்தியா' கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நீட்: "இந்தியா' கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம்
Published on

நமது நிருபர்

இளநிலை மருத்துவப் படிக்கான தகுதிகாண் நுழைவுத் தேர்வு "நீட்' உள்பட பல போட்டித் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக "இந்தியா' கூட்டணியின் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் புதன்கிழமை தில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

அப்போது, பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆகியவற்றுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

பிரதமர் மோடிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பின் அடையாளமாக தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டனர்.

இடதுசாரி ஆதரவு பெற்ற அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ), இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்), சமாஜவாதி சாத்ர சபா மற்றும் காங்கிரஸின் மாணவர் பிரிவான என்எஸ்யுஐ ஆகியவை ஜந்தர் மந்தரில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தின.

தேசிய தேர்வு முகமையை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல மாணவர் குழுக்கள் திட்டமிட்டிருந்தன. ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தடுப்பு வேலி காரணமாக மாணவர்களால் இப்பேரணியை நடத்த முடியவில்லை.

மேலும், முறைகேடு புகாருக்கு உள்ளான நீட்}யுஜி நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், என்டிஏ நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "இடதுசாரி ஆதரவுடைய ஏஐஎஸ்ஏ, தில்லி பல்கலைக்கழகத்தின் கேஒய்எஸ் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இந்த மாணவர்களில் 12 பேர் "என்டிஏ}வுக்கு எதிராக இந்தியா' என்ற பதாகையின் கீழ் செவ்வாய்க்கிழமை தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயன்றபோது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்' என்றனர். தற்போது மாணவர்கள் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் மாணவர் அமைப்புகளின் "சன்சத் கெரோ' அழைப்பில் அவர்கள் இணைந்ததால், அவர்களின் போராட்டம் புதன்கிழமை எட்டாவது நாளை எட்டியது. கடந்த வாரம் என்டிஏ அலுவலகத்துக்குள் நுழைந்து பூட்டு போட்டதற்காக என்எஸ்யுஐ தேசியத் தலைவர் வருண் செüத்ரி மற்றும் சிலருக்கு எதிராக போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்பட பல முறைகேடுகள் விசாரணையில் இருக்கும் நிலையில், யுஜிசி-நெட் தேர்வையும் மத்திய அரசு ரத்து செய்தது. இந்த இரண்டு விவகாரங்களையும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது.

X
Dinamani
www.dinamani.com