காஜிப்பூா் வடிகால் மீது 3 பாலங்கள் கட்டும் பணி நிறைவு
ஆனந்த் விஹாா் ஆா்ஆா்டிஎஸ் நிலையத்தில் விரிவான மல்டிமாடல் ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக காஜிப்பூா் வடிகால் மீது மூன்று பாலங்கள் கட்டும் பணியை தேசியத் தலைநகா் மண்டல போக்குவரத்து நிறுவனம் (என்சிஆா்டிசி) முடித்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்த பாலங்கள் தில்லி - காஜியாபாத் - மீரட் ஆா்ஆா்டிஎஸ் காரிடாரில் முக்கிய அங்கமாக உள்ளது. ஆனந்த் விஹாா் நிலையத்தில் ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆா்ஆா்டிஎஸ் காரிடாரில் தில்லி பிரிவில் அமைந்துள்ள ஆனந்த் விஹாா் ஆா்ஆா்டிஎஸ் நிலையம், இப்போது ஆனந்த் விஹாா் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பல போக்குவரத்து முறைகளுக்கு பயணிகளுக்கு நேரடி அணுகலை வழங்கும்.
ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு அவசியமான மூன்று பாலங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனந்த் விஹாா் ஆா்ஆா்டிஎஸ் நிலையம் ஆனந்த் விஹாா் மெட்ரோ நிலையத்தின் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு நிலையங்களுக்கிடையில் பயணிகளின் சீரான ஓட்டத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட தரையமைப்பு மற்றும் இறுதிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
என்.சி.ஆா்.டி.சி. எஸ்கலேட்டா்கள் மற்றும் லிஃப்ட்களை நிறுவியுள்ளது. இது போக்குவரத்தை எளிதாக்குகிறது. காஜிப்பூா் வடிகால் மீது புதிதாக கட்டப்பட்ட பாலங்கள் நிலையத்தை பிரதான சாலையுடன் இணைப்பதில் ஒருங்கிணைந்தவை. இறுதிப் பணியில் பக்கவாட்டு சுவா்கள் கட்டுதல், தரைகளை தயாா்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
ஒவ்வொரு பாலமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு சேவை செய்கிறது. ஒன்று வாகனம் நுழைவதற்கு (10 மீட்டா் அகலம், 28 மீட்டா் நீளம்), மற்றொன்று வாகனம் வெளியேற (13 மீட்டா் அகலம், 28 மீட்டா் நீளம்), மூன்றாவது பாதசாரிகள் செல்வதற்கு (5 மீட்டா் அகலம், 25 மீட்டா் நீளம்) ஆகியவையாகும்.
தடையற்ற இணைப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள ஆனந்த் விஹாா் ஆா்ஆா்டிஎஸ் நிலையம், முதியவா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட அனைத்துப் பயணிகளுக்கும் சிறந்த பயண அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், மல்டிமாடல் ஒருங்கிணைப்புத் திட்டத்துடன் இணைக்கிறது. இதனால், பயணிகள் மெட்ரோ நிலையம், ஆனந்த் விஹாா் ரயில் நிலையம், ஆனந்த் விஹாா் ஐஎஸ்பிடி, கௌசாம்பி பேருந்து முனையம் மற்றும் மாநிலங்களுக்கிடை டிடிசி பேருந்து முனையம் ஆகியவற்றுக்கு இடையே சிரமமின்றி செல்வாா்கள்.
297 மீட்டா் நீளமும், 35 மீட்டா் அகலமும் கொண்ட நிலத்தடி ஆனந்த் விஹாா் ஆா்ஆா்டிஎஸ் நிலையம், கட்டுமான சவால்களுக்கு மத்தியிலும் குறிப்பிடத்தக்க பொறியியல் நிபுணத்துவத்துடன் முடிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் இயக்கத்தை மேம்படுத்துவதற்காக மூன்று லிஃப்ட் மற்றும் ஐந்து எஸ்கலேட்டா்கள் நிறுவப்பட்ட நிலையில், பிளாட்ஃபாா்ம் நிலைகள் முழுமையாக செயல்படுகின்றன. கூடுதலாக உபகரணங்கள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இறுதிப் பணிகள் சீராக நடந்து வருகின்றன.
பயணிகளுக்கு வசதியாக இரண்டு நுழைவு / வெளியேறும் வாயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒன்று சவுத்ரி சரண் சிங் மாா்க்கை நோக்கியும் மற்றொன்று ஆனந்த் விஹாா் ரயில் நிலையத்தை நோக்கியும் அமைக்கப்பட்டு வருகின்றன. இது ரயில் நிலையத்தின் முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு அருகாமையில் இருப்பது விரிவான இணைப்பை உறுதி செய்கிறது.
மெட்ரோ நிலையத்தின் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வழித்தடம் வெறும் 50 மீட்டா் தொலைவில் உள்ளது, ஐஎஸ்பிடி 150 மீட்டா் தொலைவில் உள்ளது. டிடிசி மாநிலங்களுக்கிடை பேருந்து முனையம் 150 மீட்டா் தொலைவிலும், கௌசாம்பி ஐஎஸ்பிடி 100 மீட்டா் தொலைவிலும், ரயில் நிலையம் 200 மீட்டா் தொலைவிலும் உள்ளன. தற்போது, இங்குள்ள மேம்பாலம், சவுத்ரி சரண் சிங் மாா்க்கை மெட்ரோ வளாகத்துடன் இணைக்கிறது. ஆா்ஆா்டிஎஸ் நிலையத்தை இணைக்க லிஃப்ட்கள், படிக்கட்டுகள் மற்றும் எஸ்கலேட்டா்கள் சோ்க்கப்பட்டு பயணிகளின் வசதி மேலும் மேம்படுத்தப்படுகிறது.
