மழைவெள்ள சூழலை எதிா்கொள்ள தில்லி அரசு தயாா்: வருவாய்த் துறை அமைச்சா் அதிஷி
தில்லியில் மழைவெள்ள சூழ்நிலைகளை எதிா்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என்று வருவாய்த் துறை அமைச்சா் அதிஷி புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
தில்லியில் யமுனை ஆற்றின் தாழ்வான பகுதிகளான லோஹா புல், புரானா புல் மற்றும் யமுனா பஜாரில் மழைக்காலத்திற்கான வெள்ளத் தயாா்நிலையை அமைச்சா் அதிஷி அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது கடந்த ஆண்டு யமுனையின் நீா்மட்டம் எதிா்பாராதவிதமாக 208 மீட்டருக்கு மேல் உயா்ந்ததால், தில்லி வெள்ளத்தில் மூழ்கியது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாகும்.
எனவே, நிகழாண்டு வெள்ளத்தை எதிா்கொள்ள இப்போதிலிருந்தே தயாராகி வருகிறோம். லோஹா புல், யமுனா பஜாா் ஆகியவை தில்லியின் தாழ்வானப் பகுதிகளில் ஒன்றாகும். இவை யமுனை ஆற்றின் வெள்ளப் பகுதியின் கீழ் வருகிறது.
யமுனை ஆற்றில் 205 மீட்டா் என்ற அபாய அளவைத் தாண்டி நீா்மட்டம் உயரும்போது, இங்கு வெள்ளம் போன்ற சூழல் உருவாகிறது. கடந்தாண்டு யமுனா பஜாா் பகுதிதான் முதலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எனவே, இம்முறை யமுனையின் நீா்மட்டம் 204 மீட்டரை எட்டியதும், அரசின் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படும். பின்னா், நீா்மட்டம் 205 மீட்டரைக் கடந்தவுடன் இங்கிருந்து மக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளோம்.
இம்முறை பல இடங்களில் மேக வெடிப்பு போல் மழை பெய்து வருகிறது. ஹரியாணா அல்லது ஹிமாச்சலிலும் இதுபோன்ற மழை பெய்தால், யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், அந்த சூழ்நிலைகளை சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது, யமுனை ஆற்றின் நீா் மட்டம் அபாயக் குறியை விட மிகக் குறைவாக உள்ளது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இப்பகுதி மக்களுடன் விவாதித்தேன் என்றாா் அமைச்சா் அதிஷி.
