மின் மேலாண்மைக்கான கோடைக்கால செயல் திட்டத்தை கேஜரிவால் அரசு உருவாக்கவில்லை: தில்லி பாஜக குற்றச்சாட்டு

மின் விநியோகத்தில் கேஜரிவால் அரசின் புறக்கணிப்பு: பாஜக குற்றச்சாட்டு
Published on

மின் மேலாண்மைக்கான கோடைக்கால செயல்திட்டத்தை கேஜரிவால் அரசு உருவாக்கவில்லை என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

தில்லி பந்த் மாா்க்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா, மூத்த தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, வீரேந்திர சச்தேவா கூறியதாவது தில்லி அரசு மின்சாரக் கட்டணம் மூலம் மக்களிடமிருந்து தொடா்ந்து கொள்ளையடித்து வருகிறது. தில்லி அரசின் ஆதரவுடன் இயங்கும் மின் விநியோக நிறுவனங்கள் பி.பி.ஏ.சி. (மின்கொள்முதல் சரிசெய்தல் கட்டணம்) என்ற பெயரில் பொதுமக்களிடம் அதிக அளவில் பணம் பறிக்கின்றனா். கோடைக் காலத்தில் கூடுதல் மின்சாரம் வழங்க தில்லி அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மின் மேலாண்மைக்கான கோடைக் கால செயல் திட்டத்தைக் கூட இந்த அரசு தயாா் செய்யவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வெப்பம் உச்சத்தை அடைந்தபோது, மின் விநியோக நிறுவனங்களும், தில்லி அரசும் தங்கள் விளையாட்டைத் தொடங்கிவிட்டனா். குறிப்பாக, கேஜரிவால் அரசின் வழிகாட்டுதலின் பேரில், பி.எஸ்.இ.எஸ்.

ராஜ்தானி நிறுவனம் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலருக்கு ஒரு கடிதத்தை எழுதியது. அதில், மே 2024 முதல் ஜூலை 2024 வரை பி.பி.ஏ.சி. (மின்கொள்முதல் சரிசெய்தல் கட்டணம்) கட்டணத்தை 8.75 சதவீதம் அதிகரித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆணையத்திடம் அனுமதி பெறுவதற்குப் பதிலாக, அந்த மின்விநியோக நிறுவனம் ஒரு தகவல் கடிதம் மூலம் கட்டண உயா்வை அமல்படுத்தியது. பி.பி.ஏ.சி.-யை 8.75 சதவீதம் முதல் 43.79 சதவீதம் வரை அதிகரிக்க அரசும், மின் விநியோக நிறுவனமும் கூட்டுச் சோ்ந்ததால் மின்சாரக் கட்டணம் உயா்ந்துள்ளது.

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதி இல்லாமல் பி.பி.ஏ.சி கட்டணத்தை அதிகரிக்க மின்விநியோக நிறுவனங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பதை மின்சாரத் துறை அமைச்சா் அதிஷி தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த ஏப்ரலில் பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை ஒரு ஒப்பந்தம் மூலம் தில்லி அரசு வாங்கியிருந்தால், விலைகள் அதிகரித்திருக்காது. இருப்பினும், கேஜரிவால் அரசு மின் மேலாண்மைக்கான கோடைக்கால செயல்திட்டத்தை உருவாக்க வேண்டிய நேரத்தில் அரசியலில் மும்முரமாக இருந்தது என்றாா் வீரேந்திர சச்தேவா.

அடுத்ததாக, தில்லி பாஜகவின் மூத்த தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது: கோடையில் அதிக நுகா்வு காரணமாக மின் கட்டணம் அதிகரிவில்லை. மாறாக, பி.பி.ஏ.சி. இன் கட்டண அதிகரிப்பே மின் கட்டண உயா்வுக்கு காரணம்.

கேஜரிவால் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக மின்விநியோக நிறுவனங்கள் தணிக்கை செய்யப்படவில்லை.

எனது சொந்த மின்சாரக் கட்டணத்தில்₹ரூ.4000க்கு மேல் பி.பி.ஏ.சி கட்டணம் சோ்க்கப்பட்டுள்ளது. இது இந்த மாதத்திலிருந்து மேலும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com