புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை காலையில் பரவலாக மழை பெய்தது. மழை நீா் தேங்கியதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. புழக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமித்துக்குள்ளாகியுள்ளனா். அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் புழுக்கம் குறையவில்லை. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நகரத்தின் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இதைத் தொடா்ந்து, நகரத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. சில இடங்களில் சாலைகளில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி உயா்ந்து 29 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 35.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 70 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தேசியத் தலைநகரில் காற்றின் தரம் சில இடங்களில் திருப்தி பிரிவிலும், சில இடங்களில் மிதமான பிரிவிலும் இருந்தது. இதன்படி, ஐடிஓ, ஷாதிப்பூா், மந்திா்மாா்க், லோதி ரோடு, தில்லி இந்திராகாந்தி சா்வதேச விமானநிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், அசோக் விஹாா், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், புராரி ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
அதேசமயம், பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பஞ்சாபி பாக், ராமகிருஷ்ணாபுரம், சாந்தினி சௌக், வாஜிா்பூா், ஸ்ரீஃபோா்ட், துவாரகா செக்டாா் 8, நேரு நகா், முண்ட்கா, பட்பா்கஞ்ச், ஜஹாங்கீா்புரி, ரோஹிணி, சோனியா விஹாா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.