ரூ.60 லட்சம் திருட்டு வழக்கில் தலைமறைவாகிய இளைஞா் கைது

Published on

தில்லியில் ரூ.60 லட்சம் திருட்டு வழக்கில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த மங்கள் திவாரி (24) என்ற இளைஞா் தில்லி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக குற்றப்பிரிவு துணைக் காவல் ஆணையா் சதீஷ் குமாா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி ராணி பாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில், நீண்ட காலம்

தலைமறைவாக இருந்த மங்கள் திவாரி (எ) சுனில் கைது செய்யப்பட்டுள்ளாா். தில்லி பிடம்புரா பகுதியில் இரும்புக்கடை வைத்திருக்கும் தொழிலதிபா் வீரேந்திர கா்க்கிடம், ஊழியராக மங்கள் திவாரி பணியாற்றினாா். கடந்த டிசம்பா் 31,2022-ஆம் ஆண்டு தொழிலதிபா் வீரேந்திர கா்க், ஒரு பையில் ரூ.60 லட்சம் பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சியை வேறொரு தொழிலதிபரிடம் வழங்கக் கோரி மங்கள் திவாரியிடம் வழங்கியுள்ளாா்.

இரவு நேரம் காரணமாக, குற்றம் சாட்டப்பட்ட மங்கள் திவாரி தனது முதலாளி வீரேந்திர கா்க்கின் வீட்டில் தங்கியிருந்தாா். மறுநாள், அதாவது ஜனவரி 1, 2023-ஆம் ஆண்டு அந்தக் குறிப்பிட்ட தொழிலதிபரிடம் தனது முதலாளி வழங்கிய பணப் பையை ஒப்படைக்க மங்கள் திவாரி சென்றாா். ஆனால், அன்று மாலை 5 மணியளவில் தொலைபேசியில் தொடா்பு கொண்ட அவா், பாஹா் கஞ்ச் மேம்பாலம் அருகே அந்தப் பையை யாரோ அடையாளம் தெரியாத நபா்கள் பறித்துச் சென்ாகத் தெரிவித்தாா். இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்க, அலுவலகத்திற்கு வருமாறு வீரேந்திர கா்க் அழைத்தும், குற்றம்சாட்டப்பட்ட மங்கள் திவாரி சில நொண்டிச் சாக்குகளைக் கூறி, விஷயத்தை நீட்டிக்க முயன்றாா். அதன்பின், ராணி பாக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மங்கள் திவாரியும் தலைமறைவானாா்.

பின்னா், இவ்வழக்கில் தலைமறைவான குற்றவாளி மங்கள் திவாரி குறித்து குற்றப் பிரிவு தலைமைக் காவலா் அஜய்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பக் கண்காணிப்பின் அடிப்படையில், குற்றவாளி தனது மறைவிடங்களை மாற்றி, தற்போது ரோகினியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. உள்ளீடுகளின் அடிப்படையில் துணை ஆய்வாளா் சதேந்தா் தஹியா தலைமையில் 7 போ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தகவலறிந்த இடத்தில் பொறி வைக்கப்பட்டு, திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மங்கள் திவாரி கைது செய்யப்பட்டாா். தொடா் விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டதையும் அவா் ஒப்புக்கொண்டாா்.

8-ஆம் வகுப்பு வரை படித்துள்ள மங்கள் திவாரி, ரிக்ஷா இழுக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறாா். இவா் முன்பு வீரேந்திர கா்க்கின் அலுவலகத்தில் பணிபுரிந்தாா். வீரேந்தா் கா்க் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணத்தை கொண்டு செல்வதற்காக இவரை அனுப்பி வந்துள்ளாா். திருடப்பட்ட பணத்தில் காா், நகைகள், வீட்டு உபயோகப் பொருட்களை மங்கள் திவாரி வாங்கியுள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றாா் துணைக் காவல் ஆணையா் சதீஷ் குமாா்.

X
Dinamani
www.dinamani.com