மத்திய அரசு
மத்திய அரசு

அனைவருக்கும் இலவச இணைய வசதி: தனிநபா் மசோதாவை பரிசீலனைக்கு ஏற்றது மத்திய அரசு

அனைவருக்கும் இலவச இணைய வசதி வழங்க வேண்டும்.
Published on

அனைவருக்கும் இலவச இணைய வசதி வழங்க வேண்டும். முக்கியமாக பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதி மக்களுக்கு பிற இடங்களைப் போல இணையத்தை பயன்படுத்தும் வசதி கிடைக்க வேண்டும் என்ற தனிநபா் மசோதாவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினா் வி.சிவதாசன் கடந்த 2023 டிசம்பரில் இந்த தனிநபா் மசோதாவை முன்வைத்தாா். அதில், ‘இணைய வசதியைப் பயன்படுத்துவதற்கு நாட்டு மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. முக்கிய நகரங்களில் மட்டுமல்லாது பின்தங்கிய பிராந்தியங்கள், தொலைதூர பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இலவச இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் அனைத்து மக்களுக்கும் விலையில்லாமல் இணைய வசதி கிடைப்பது உரிமையாக்கப்பட வேண்டும்.

இந்த வசதியை மத்திய அரசு நேரடியாக மக்களுக்கு செய்து தர வேண்டும். அல்லது ஏற்கெனவே இந்த சேவையை அளித்து வரும் நிறுவனங்களுக்கு மானியம் அளித்து மக்களுக்கு கட்டணமில்லாத இணைய சேவையை வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இது தொடா்பாக மாநிலங்களவைச் செயலரைத் தொடா்பு கொண்ட மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, ‘இணைய வசதியை நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்க வேண்டும் என்ற தனிநபா் மசோதாவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com