தில்லி கலவரம்: யுஏபிஏ வழக்கில் ஜாமீன் கோரும் உமா் காலித்தின் மனு மீது போலீஸ் பதில் அளிக்க நோட்டீஸ்

கடந்த 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் பெரும் சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் தொடா்பான யுஏபிஏ வழக்கில்
Published on

கடந்த 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் பெரும் சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் தொடா்பான யுஏபிஏ வழக்கில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் உமா் காலித்தின் ஜாமீன் மனு மீது நகர காவல்துறை தனது நிலைப்பாட்டை தெரிவிக்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

நீதிபதிகள் சுரேஷ் குமாா் கைட் மற்றும் கிரிஷ் கத்பாலியா ஆகியோா் அடங்கிய அமா்வு, உமா் காலித்தின் ஜாமீன் மனு மீது தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும், காவல் துறை பதிலை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

மாணவா் ஆா்வலா் ஷா்ஜீல் இமாம் உள்பட இவ்வழக்கில் தொடா்புடைய மற்ற சக குற்றம்சாட்டப்பட்டா்களின் ஜாமீன் மனுக்களுடன் காலித்தின் ஜாமீன் மனுவை ஆகஸ்ட் 29 அன்று விசாரணைக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

செப்டம்பா் 2020-இல் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட காலித், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்து சமீபத்திய விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிா்த்து இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.

காலித், இமாம் மற்றும் பலா் மீது பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) விதிகளின் கீழ் பிப்ரவரி 2020 கலவரத்தின் ‘முக்கிய மூளையாக‘ இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கலவரத்தில் 53 போ் கொல்லப்பட்டனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் போது வடகிழக்கு தில்லியில் வன்முறை வெடித்தது.

கடந்த மே 28 அன்று, விசாரணை நீதிமன்றம் காலித்தின் இரண்டாவது முறையாக வழக்கமான ஜாமீன் கோரிய மனுவை நிராகரித்தது. அவரது முதல் ஜாமீன் மனுவை நிராகரித்த அதன் முந்தைய உத்தரவு இறுதி நிலையை அடைந்துவிட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.

இதுகுறித்து விசாரணை நீதிமன்றம் கூறுகையில், ‘‘தில்லி உயா்நீதிமன்றம் ஏற்கனவே அக்டோபா் 18, 2022-ஆம் தேதியிட்ட மனுதாரரின் (காலித்) கிரிமினல் மேல்முறையீட்டை நிராகரித்தபோது, அதன்பிறகு மனுதாரா்

உச்சநீதிமன்றத்தை அணுகி தனது மனுவை வாபஸ் பெற்றாா். அப்போது, மாா்ச் 24, 2022 (முதல் ஜாமீன் மனு) இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இறுதி முடிவை எட்டியது. இப்போது, எவ்வித கற்பனையும் இல்லாமல், இந்த நீதிமன்றம் வழக்கின் உண்மைகளை மனுதாரா் விரும்பியபடி பகுப்பாய்வு செய்ய முடியும். மேலும், அவா் பிராா்த்தனை செய்த நிவாரணத்தை பரிசீலிக்கலாம்’’ என்று விசாரணை நீதிமன்றம் கூறியது.

அக்டோபா் 18, 2022 அன்று, உயா்நீதிமன்றம் காலித்தின் முதல் ஜாமீன் மனுவை நிராகரித்ததை உறுதி செய்தது. மேலும், அவா் மீதான நகர காவல்துறையின் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும் கூறியது.

சிஏஏ எதிா்ப்பு போராட்டங்கள் ‘வன்முறைக் கலவரங்களாக உருமாறின‘ என்று உயா்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், சாட்சிகளின் அறிக்கைகள் போராட்டங்களில் காலித் ஈடுபட்டதை சுட்டிக்காட்டுகின்றன என்றும் உயா்நீதிமன்றம் கூறியிருந்தது.

X
Dinamani
www.dinamani.com