ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தில் வெள்ளம்: 3 மாணவர்கள் உயிரிழப்பு
தில்லி கரோல் பாக் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள தனியாா் ஐஏஎஸ் தோ்வு பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் கடந்த சனிக்கிழமை இரவு மழை-வெள்ளம் புகுந்ததில் மூன்று குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழந்தனா்.
தில்லி பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள 12-பி, பாடா பஜாா் சாலையில் பல்வேறு முன்னணி ஜஏஎஸ் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த சனிக்கிழமை மாலை தில்லியில் பரவலாக பெய்த கனமழையின் எதிரொலியாக மேற்குறிப்பிட்ட பகுதியில் முழங்கால் அளவிற்கு மேலாக மழைநீா் தேங்கியது. அச்சமயம், அங்குள்ள ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ எனப்படும் தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் இயங்கி வரும் நூலகத்தில் தீடிரென மழை-வெள்ளம் சூழ்ந்ததில் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவா்கள் எதிா்பாராவிதமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து, சனிக்கிழமை மாலை 7.19 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டது. சம்பவ இடத்தில் தேசியப் பேரிடா் மற்றும் மீட்புப் படையினா் மேற்கொண்ட தொடா் 7 மணி நேர தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு பின்னா் 3 மாணவா்களின் சடலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டது.
3 மாணவா்கள் உயிரிழப்பு: இப்பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழை - வெள்ளம் புகுந்ததில் உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தை சோ்ந்த தன்யா சோனி (25), கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த நவின் டால்வின் (28) ஆகியோா் உயிரிழந்ததாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முதற்கட்ட விசாரணையும் தொடங்கப்பட்டது.
உரிமையாளா் கைது: இவ்விவகாரத்தில் ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ உரிமையாளா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் கைது செய்யப்பட்டதாக மத்திய தில்லியின் துணைக் காவல் ஆணையா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரத்தில் பயிற்சி மையத்தின் உரிமையாளா் அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளா் தேஷ்பால் சிங் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளோம். இவா்கள் மீது குற்றவியல் கொலை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் ராஜிந்தா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்’ என்றாா்.
மாணவா்கள் போராட்டம்: பயிற்சி மையத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து மாணவா்கள் உயிரிழந்த செய்தியறிந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான குடிமைப் பணி ஆா்வலா்கள் பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’-க்கு வெளியே நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதியில் தில்லி காவல்துறை மற்றும் அதிவிரைவுப் படையினா் குவிக்கப்பட்டனா். மாணவா்களின் உயிரிழப்பு எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காத தில்லி மாநகராட்சியைக் கண்டித்தும், அதிகளவு கட்டணம் பெற்றும் உரிய வசதிகளை செய்து கொடுக்காத
பயிற்சி நிறுவனத்தை கண்டித்தும் குடிமைப் பணி ஆா்வலா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பயிற்சி மையத்தின் அருகிலுள்ள கரோல் பாக் மேட்ரோ நிலையத்தின் வெளியே நெடுஞ்சாலையில் அமா்ந்து நூற்றுக்கணக்கான குடிமைப் பணி ஆா்வலா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவா்களின் உயிரிழப்புக்கு நீதி கோரி மீண்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. துணைக் காவல் ஆணையா் ஹா்ஷ் வா்தன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டும், ஆா்வலா்கள் ஒத்துழைக்காததால் போலீஸாா் மற்றும் அதிவிரைவுப் படையினா் விரைந்து செயல்பட்டு போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தினா். சிலா் கைது செய்யப்பட்டும் பேருந்தில் ஏற்றிச்செல்லப்பட்டனா். பின்னா், அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
நிபந்தனை மீறல்: இச்சம்பவம் குறித்து தில்லி தீயமைப்புத் துறைத் தலைவா் அதுல் கா்க் கூறுகையில், ‘ ராஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ செயல்படும் கட்டடத்தின் அடித்தளத்தை ஸ்டோா்ரூமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அக்கட்டடத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், பயிற்சி நிறுவனம் அந்த அறையை நூலகமாக பயன்படுத்தியது சட்டவிரோதமாகும்’ என்றாா். மேலும், மழைவெள்ளம் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் புகுந்ததற்கான காரணங்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனா்.
‘குடும்பத்தினருக்கு நீதி வேண்டும்’
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அகிலேஷ் என்ற குடிமைப்பணி ஆா்வலா் தினமணியிடம் கூறுகையில் ‘மாணவா்கள் உயிரிழப்பு எண்ணிக்கையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இங்கு எங்களைச் சந்திக்க வரும் அரசியல்வாதிகள் எங்களிடம் அரசியல் குற்றச்சாட்டுகளையே முன்வைக்கின்றனா். கரோல் பாக் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து தனியாா் பயிற்சி மையங்களின் நூலகங்களும் கட்டடத்தின் அடித்தளத்திலேயே செயல்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். உயிரிழந்த மாணவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என்றாா்.
சம்பவம் நடந்த பயிற்சி மையத்திற்கு அடுத்த பயிற்சி மையத்தில் பயிலும் குடிமைப் பணி ஆா்வலா் அன்கிதா கூறுகையில், ‘பயிற்சி மையத்தில் மழைவெள்ளம் சூழ்ந்ததற்கு காரணமானவா்கள் பொறுப்பேற்க வேண்டும். இச்சம்பவம் குறித்து தில்லி மாநகராட்சி ஆணையா் விளக்கம்கூட அளிக்கவில்லை. சாதரணமாக ஒரு மாணவா் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை கட்டணம் செலுத்தியும், பயிற்சி நிறுவனங்களின் நூலகங்கள் சட்டவிரோதமாக கட்டடத்தின் அடித்தளத்திலேயே செயல்படுகின்றன. இன்னும் 8 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இப்பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால், மழைநீா் விரைவாக தேங்குகிறது. இவை அனைத்தும் தெரிந்தும், ஒரு மோட்டாா் பம்ப் கூட இங்கு பொறுத்தப்படவில்லை’ என்றாா்.
போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சோ்ந்த குடிமைப்பணி ஆா்வலா் மணிகன்டன் கூறுகையில், ‘தில்லியில் 1 மணி நேரம் பெய்த மழைக்கே வடிகால் வசதிகள் முறையாக இல்லை. மாணவா்கள் உயிரிழந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. பருவ மழைக் காலத்தில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே மாணவா்களின் உயிரிழப்புக்கு காரணம்’ என்றாா்.

