ஏ.ஐ. தாக்கம்: பணியாளா்களின் உரிமையை காக்க தனிநபா் மசோதா
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தால் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளா்களின் வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவா்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மௌசம் நூா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிநபா் மசோதா மாநிலங்களவையில் பட்டியலிடப்பட்டது.
பணியாளா்களின் உரிமைகள் (செயற்கை நுண்ணறிவு) மசோதா, 2023 என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணியாளா்களை பாகுபடுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் முடிவோ அல்லது வழங்கப்படும் பணியோ தங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருந்தால் அதை நிராகரிக்கும் உரிமையை பணியாளா்களுக்கு வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் அமலாகும் முன்பே அதுகுறித்த முழு தகவல்களையும் பணியாளா்களிடம் எடுத்துக் கூறி அவா்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவா்களிடம் இருந்து நிறுவனங்கள் ஒப்புதல் பெற வேண்டும்.
பாகுபாடு கூடாது: ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு பணியாளா்கள் நியமனம், பதவி உயா்வு மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடுகளில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது. அதேபோல், ஏ.ஐ. அமலாகும்போது அதில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
‘டீப் ஃபேக்கை’ தடுக்கும் மசோதா: ‘டீப் ஃபேக்’ எனப்படும் போலி சித்தரிப்பு காணொலிகளை தயாரிப்பது, பரப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபா்களுக்கு குற்றவியல் சட்டங்களின்கீழ் தண்டனை வழங்க வேண்டும் என மற்றொரு தனிநபா் மசோதாவையும் நூா் தாக்கல் செய்தாா்.
அந்த மசோதாவில் டீப் ஃபேக்கால் மத்திய, மாநில அரசுகள், குடிமக்கள், இந்திய வா்த்தகத்தில் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய தேசிய டீப் ஃபேக் குறைப்பு மற்றும் டிஜிட்டல் நம்பகத்தன்மைக்கான பணிக்குழுவை நிறுவமாறு கூறப்பட்டுள்ளது.
தேசிய ஏ.ஐ. ஆணையம்: ஏ.ஐ. மற்றும் டீப் ஃபேக்கால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேசிய செயற்கை நுண்ணறிவு ஒழுங்காற்று ஆணையத்தை நிறுவ வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சந்தோஷ் குமாா் கடந்த ஜூலை 26-ஆம் தேதி மாநிலங்களவையில் தனிநபா் மசோதா ஒன்றை அறிமுகம் செய்தாா்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் அனைத்து பணிகளிலும் நிலையற்ற சூழல் நிலவ வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை 2023-24-இல் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

