குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழப்பு வழக்கில் மேலும் 5 போ் கைது - தில்லி காவல்துறை
தில்லியில் தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மழை-வெள்ளம் புகுந்து 3 குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழந்த வழக்கில் மேலும் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள ‘ராவ்ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ எனப்படும் தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில், கடந்த சனிக்கிழமை இரவு மழை-வெள்ளம் புகுந்ததில் இரண்டு மாணவிகளும், ஒரு மாணவரும் பரிதாபமாக உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக அப்பயிற்சி மையத்தின் உரிமையாளா் அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளா் தேஷ்பால் சிங் ஆகிய இருவரை தில்லி போலீஸாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை
கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் நூலகம் இயங்கி வந்த அடித்தளத்தின் உரிமையாளா் உள்பட மேலும் 5 போ் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனா். தற்போது, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.
இது தொடா்பாக மத்திய தில்லி காவல் துணை ஆணையா் ஹா்ஷ் வா்தன் கூறுகையில், ‘சம்பவம் நடந்த ‘ராவ்ஸ் ஐஏஎஸ்
ஸ்டடி சா்க்கிள்’ இயங்கி வரும் கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் வெவ்வேறு நபா்களுக்குச் சொந்தமானது. இதில், மழை-வெள்ளம் புகுந்த பயிற்சி மையத்தின் அடித்தளத்தின் உரிமையாளரும், பயிற்சி மையத்தின் கட்டடத்தின் கேட்டை
வாகனத்தைக் கொண்டு சேதப்படுத்தியதாகத் தோன்றும் ஒரு நபா் உள்பட மேலும் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய அனைவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்றாா்.
வதந்திகளைப் பரப்பாதீா்: தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மூன்று குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழந்த சோகத்தைப் பயன்படுத்தி போலிச் செய்திகள் பரப்பப்படுகிறது என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை தனது ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது: பழைய ராஜிந்தா் நகரில் உள்ள தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் நடத்த சோகத்தைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் சில கணக்குகள் போலிச் செய்திகளைப் பரப்பி மாணவா்களைத் தூண்டிவிடுகின்றன. உண்மை சரிபாா்ப்பு இல்லாமல் இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இச்சம்பவம் தொடா்பாக தவறான செய்திகளை பரப்புபவா்கள் மீது
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி, தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் உரிமையாளா்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

