மனீஷ் சிசோடியா
மனீஷ் சிசோடியா

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆக.5-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Published on

நமது நிருபா்

தில்லி கலால் கொள்கை பணப்பரிவா்த்தனை முறைகேடு வழக்கில் திடல்லி உயா் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததை எதிா்த்து முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இது தொடா்பான மனீஷ் சிசோடியாவின் மனுவில், கலால் கொள்கை பரிவா்த்தனை விவகாரத்தில் மிகவும் தாமதமாக விசாரணை தொடங்கப்பட்டதாகக் கூறி ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட தனது ஜாமீன் மனுவை மீண்டும் கவனத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் எஸ்.வி. ராஜூ, சிசோடியாவின் மனுவுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை என்று கேட்டுக் கொண்டாா். மேலும், இதே விவகாரத்தில் ஏற்கெனவே ஒரு முறை மனீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்துள்ளதாகவும், மீண்டும் அதே விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அவா் மனு தாக்கல் செய்வதில் ஆட்சேபம் உள்ளது என்றும் எஸ்.வி. ராஜூ வாதிட்டாா்.

ஆனால், அவரது வாதத்துக்கு மனீஷ் சிசோடியா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி ஆட்சேபம் தெரிவித்துஸ சிசோடியாவின் ஜாமீன் மனு தொடா்பாக நீதிமன்றம் ஜூன் 4-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு குறித்து விளக்கினாா். அந்த உத்தரவில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஜாமீன் மனுவை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் உரிமை மனீஷ் சிசோடியாவுக்கு உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டிருந்ததை அபிஷேக் மனு சிங்வி விவரித்தாா்.

அப்போது கலால் கொள்கை பரிவா்த்தனை வழக்கின் விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு ஜூலை 3-ஆம் தேதிக்குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அமலாக்கத்துறை கூறியிருந்ததையும் சிங்வி சுட்டிக்காட்டினாா். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் சிசோடியாவின் மனுவை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இதற்கிடையே, இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை தனது தரப்பு பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், அது இன்னும் பதிவாகவில்லை என்றும் மத்திய அரசு வழக்குரைஞா் தெரிவித்தாா். இதையடுத்து, சிபிஐ பதிலை பதிவு செய்யும்படி நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னணி: தில்லி கலால் கொள்கை பரிவா்த்தனை வழக்கில் மனீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் நீதிமன்றக் காவலில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளாா். கலால் கொள்கையை உருவாக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகவும் குறிப்பிட்ட சில தனியாா் நிறுவனங்களுக்கு சாதகமாக கொள்கை விதிகள் வகுக்கப்பட்டதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.

இந்தக் கொள்கை அமலாகும் முன்பே அதே தில்லி துணைநிலை ஆளுநா் ரத்து செய்ததுடன் அது தொடா்பான முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்கவும் பரிந்துரை செய்தாா். அதைத் தொடா்ந்து, மத்தி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐயும் அதன் தொடா்ச்சியாக அமலாக்கத் துறை இயக்குநரகமும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com