மத்திய அரசின் சக்கர வியூகத்தை தகர்ப்போம்: மக்களவையில் ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சக்கர வியூகத்தால் நாடெங்கிலும் அச்சம் மிகுந்த சூழ்நிலை நிலவுகிறது.
மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Published on
Updated on
2 min read

புதுதில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சக்கர வியூகத்தால் நாடெங்கிலும் அச்சம் மிகுந்த சூழ்நிலை நிலவுகிறது; அந்த சக்கர வியூகத்தை ’இந்தியா' கூட்டணி தகர்க்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை பங்கேற்றுப் பேசினார். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததால், ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன், ராகுல் உரையின்போது அவைத் தலைவர் ஓம் பிர்லா அடிக்கடி குறுக்கிட்டு, சில கருத்துகளைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தவும் நேரிட்டது.

எதிர்ப்பு முழக்கங்களுக்கு இடையே ராகுல் பேசியதாவது: பெரு வணிகங்களின் கட்டமைப்பை ஊக்குவித்தல் மற்றும் ஜனநாயக அமைப்பு முறையை அழிக்கும் ஏகபோக அரசியலை வலுப்படுத்துவதே 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் ஒரே நோக்கமாக உள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் (மகாபாரத இதிகாசத்தில்) ஹரியாணாவின் குருஷேத்திரத்தில் அபிமன்யு என்ற இளைஞரை சக்கர வியூகத்தில் 6 பேர் கொன்றனர். சக்கர வியூகம் என்பது வன்முறையும் அச்சமும் கொண்டதாகும். சக்கர வியூகத்தில் சிக்கிய அபிமன்யு கொல்லப்பட்டார்.

சக்கர வியூகமானது, தாமரை மலரைப் போல் காட்சியளிக்கும் பத்ம வியூகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த 21-ஆம் நூற்றாண்டில் நமது நாட்டில் மற்றொரு "சக்கர வியூகம்' உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் தாமரை வடிவில் உள்ளது. பிரதமர் மோடி தனது மார்பில் அந்தச் சின்னத்தைத் தரித்துள்ளார்.

’சக்கர வியூகத்தின் மையம்': பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 6 பேர், அந்த சக்கர வியூகத்தின் மையமாக உள்ளனர் (மற்ற நால்வரில் இரு தொழிலதிபர்களின் பெயரை ராகுல் கூறத் தொடங்கியபோது, அவைத் தலைவர் குறுக்கிட்டு அனுமதி மறுத்தார். அவர்கள் அவையின் உறுப்பினர்கள் இல்லை என்பதால் அவர்களின் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்று ஓம் பிர்லா அறிவுறுத்தினார். இதே கருத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் வலியுறுத்திய நிலையில், இரு தொழிலதிபர்களையும் ஏ1, ஏ2 எனக் குறிப்பிட்டு ராகுல் தொடர்ந்து பேசினார்).

ஏ1, ஏ2 ஆகியோரை பாதுகாக்க மத்திய அமைச்சர் முயற்சிக்கிறார். இதுவும் எங்களுக்கே சாதகம். நீங்கள் (ஆளுங்கட்சியினர்) சக்கர வியூகத்தைக் கட்டமைக்கிறீர்கள்: நாங்கள் (இந்தியா கூட்டணி) அதை தகர்ப்போம்.

மூன்று சக்திகள்: இந்தியாவைப் பிடித்துள்ள சக்கர வியூகமானது, தனது பின்னணியில் மூன்று சக்திகளைக் கொண்டுள்ளது. ஏகபோக மூலதனச் சிந்தனை; சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற அமைப்புகள்;அரசியல் நிர்வாகம் ஆகியவையே அவை. இந்த மூன்றும் நாட்டைச் சீரழித்துள்ளன.

ஆறு பேரின் சக்கர வியூகத்தில் நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறு-நடுத்தர தொழில்துறையினர் சிக்கியுள்ளனர். தற்போதைய பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அது நிகழவில்லை. மாறாக, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை சக்கர வியூகம் தாக்கி அழித்துள்ளது.

’வரி பயங்கரவாதம்': ஏற்கெனவே பணமதிப்பிழப்பு, "வரி பயங்கரவாதம்' ஆகியவற்றின் மூலம் இதைச் செய்தனர். "வரி பயங்கரவாதத்தை' முடிவுக்குக் கொண்டுவர தற்போதைய பட்ஜெட் எதையும் செய்யவில்லை.

விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் கிடைப்பதை "இந்தியா' கூட்டணி உறுதி செய்யும். ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நாங்கள் உறுதி செய்வோம்.

பிரதமர் சொல்வதை நடுத்தர வகுப்பினர் எப்போதும் கேட்டு வந்துள்ளனர். கரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் பிரதமர் கேட்டுக் கொண்டபடி அவர்கள் விளக்குகளை ஏற்றி, கை தட்டினர். ஆனால், இந்த அரசால் அதிருப்தி அடைந்துள்ள மத்திய தர வகுப்பினர் தற்போது "இந்தியா' கூட்டணி பக்கம் திரும்பியுள்ளனர் என்றார்.

ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தினார். நாடாளுமன்றத்துக்கு உள்ளே செல்லும் வழியிலும் வெளியேறும் வழியிலும் இருந்தபடி ஊடகங்கள் எம்.பி.க்களின் கருத்துகளை சேகரித்து வந்தன. தற்போது ஊடகங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் செய்தியாளர்கள் இருந்தபடி செய்தி சேகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று மக்களவையில் ராகுல் வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா "இது போன்ற விஷயங்களை என்னிடம் தனிப்பட்ட முறையில் விவாதிக்க வேண்டும். இவற்றை அவையில் எழுப்பக் கூடாது' என்றார்.

பின்னர், செய்தியாளர்கள் அடங்கிய குழுவினரைச் சந்தித்த ஓம் பிர்லா, அவர்களின் குறைகளைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

’ச‌க்​கர வியூ​க​தா​ரி​க‌ள்' யா‌ர்?

ம‌க்​க​ள​வை​யி‌ல் உரை​யா‌ற்​றிய பிற‌கு எ‌க்‌ஸ் தள‌த்​தி‌ல் ராகு‌ல் வெளி​யி‌ட்ட பதி​வி‌ல், ”இ‌ந்த 21-ஆ‌ம் நூ‌ற்​றறாண்​டி‌ல் தாமரை வடிவ ச‌க்​கர வியூ​க‌ம் நா‌ட்டைச் சூ‌ழ்‌ந்​து‌ள்​ளது. அது 6 நப‌ர்​க​ளா‌ல் க‌ட்டு‌ப்​ப​டு‌த்​த‌ப்​ப​டு​கி​ற‌து. அவ‌ர்​க‌ள், பிர​த​ம‌ர் மோடி, அமி‌த் ஷா, அ​தானி, அ‌ம்​பானி, அஜீ‌த் தோவ‌ல், மோக‌ன் பாக​வ‌த்' எ‌ன்று கு​றி‌ப்​பி‌ட்​டு‌ள்ளா‌ர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com