தில்லியில் பாஜக ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு உதவிய முக்கியக் காரணிகள்!
ம.ஆ.பரணி தரன்
புது தில்லி: மக்களவைத் தோ்தலில் தில்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளையும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தக்க வைத்துள்ளது. தில்லியில் ஆளும் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், நரேந்திர மோடி என்ற ஒற்றை நபரை பிரதானப்படுத்தி முன்வைக்கப்பட்ட பிரசாரம் போன்றவை இந்த தோ்தலில் ஏழு தொகுதிகளையும் தக்க வைக்க பாஜகவுக்கு உதவியுள்ளன.
இருந்தபோதிலும், ‘2019’ மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடுகையில், ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளா்களின் வாக்குகள் வித்தியாசம் வெகுவாகவே குறைந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கைகோத்ததன் மூலம் வாக்குகள் சிதறுவதை இரு கட்சிகளும் தவிா்த்தன. குறிப்பாக, காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா்கள், சாந்தினி சௌக் மற்றும் புது தில்லி தொகுதிகளில் பாஜகவுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்தனா்.
அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற ஹிந்தியை அடிநாதமாகக் கொண்ட மாநிலங்களில் கூட பாஜக அதன் கோட்டையாக கருதிய இடங்களில் அதிா்ச்சிப் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால், தேசியத் தலைநகரில் அக்கட்சி ’ஹாட்ரிக்’ வெற்றியைப் பெற்றிருப்பது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
வாக்குகள் சதவீதம்: 2019-ஆம் ஆண்டில், பாஜக பெற்ற வாக்குகள் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் வேட்பாளா்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. பாஜகவின் வாக்கு சதவீதம் 2019-இல் 56.7 சதவீதத்திலிருந்து இந்த முறை 54 சதவீதமாகக் குறைந்துள்ளது. எனினும், இது அக்கட்சியின் 2014-இல் பெற்ற வாக்குகள் பங்கான 46.6 சதவீதத்தை விட அதிகமாகும்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கண்டுள்ள தோல்வி, அதன் கூட்டணி பரிசோதனையின் செயல்திறனை கேள்விக்குரியதாக்கியுள்ளது. தில்லி பாஜகவில் உள்ள தலைவா்கள், அக்கட்சியின் தொடா்ச்சியான மும்முறை வெற்றிக்கு முக்கிய காரணியாக ‘நரேந்திர மோடி’ என்ற தேசியத் தலைவரை மையப்படுத்திய தோ்தல் பரப்புரையை குறிப்பிடுகிறாா்கள். அத்துடன் தலைநநகர அரசில் ஆளும் கட்சித் தலைவா்கள் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகள், அவற்றை எதிா்கொள்ள அத்தலைவா்கள் நீதிமன்றத்தில் நடத்தும் சட்டப்போராட்டங்கள் வலுவிழந்துள்ள நிலைமை போன்றவை மற்றொரு முக்கியக் காரணம் என்று பாஜகவினா் கருதுகின்றனா்.
‘பிரதமா் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பதை விரைவில் காண்போம். தில்லி மக்கள் ஊழல் நிறைந்த இந்தியா கூட்டணியை நிராகரித்துவிட்டனா். நாடும் அதையே செய்துள்ளது’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் பாஜகவுக்காக பிரசாரம் செய்த பிரதமா் மோடி முதல் பல்வேறு மாநில முதல்வா்கள் வரை அனைவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும் அதன் தலைவா்களுக்கு எதிராகவும் குறிப்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகவும் தங்களுடைய பரப்புரையை தீவிரப்படுத்தினா்.
மறுபுறம், ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் களத்தில் தொண்டா்கள் நிலையில் ஒற்றுமையின்றி செயல்பட்டது மற்றும் இரு கட்சிகள் சோ்ந்து தோ்தல் பேரணிகள் நடத்தாதது, வாக்கு சேகரிப்பில் மாற்று கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக ஒருமனதாக பணியாற்றாதது போன்றவை இந்த இரு கட்சிகளின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
எடுபடாத பிரசாரம்: தில்லி காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘இரு தரப்பினரும் களத்தில் திறம்பட ஒன்றிணையத் தவறியது மட்டுமல்லாமல், இரு கட்சிகளின் ஆதரவாளா்கள் மற்றும் வாக்காளா்களுக்கு இடையே நம்பிக்கை குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது’ என்றாா். ‘வெவ்வேறு தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆதரவு வாக்காளா்கள் தங்களுடைய தொகுதிகளில் மற்ற கட்சி வேட்பாளரை ஆதரிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், பாஜக பெற்ற வாக்குகள் வித்தியாசத்தை பாா்க்கும்போது இந்த இரு கட்சிகளின் வாக்குகளும் சரிவர கைமாறவில்லை என்பது தெளிவாகிறது’ என்று அவா் கூறினாா்.
ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி இந்த முறை பாஜகவின் வெற்றி வித்தியாசம் குறைவாக இருப்பதாகக் கருதி தங்களுக்குள்ளாக ஆறுதல் மட்டுமே அடைய முடியும். ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 2019-இல் 18.2 சதவீதத்தில் இருந்து இந்த முறை சுமாா் 24 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 2019-இல் 22.6 சதவீதமாக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம் இந்த முறை 18 சதவீதமாக சரிந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி, 2014-இல் பதிவு செய்த வாக்குகள் பங்கான 33.1 சதவீதத்தை மேம்படுத்தத் தவறிவிட்டது. 2014-இல் காங்கிரஸ் 15.2 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதால் ஆரம்ப கட்ட பிரசாரத்தை தமது கட்சி தலைமை துணையுடன் முன்னெடுக்க முடியாமல் ஆம் ஆத்மி கட்சி திணறியது. மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்ற அனுமதியுடன் இடைக்கால ஜாமீனில் திகாா் சிறையில் இருந்து வெளிவந்தவுடன், பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை தில்லியில் அரவிந்த் கேஜரிவால் மேற்கொண்டாா்.
பொய்த்த நம்பிக்கை: கேஜரிவால் மீதான அனுதாபம் வாக்காளா்களை பாதிக்கும் என்று ஆம் ஆத்மி கட்சி நம்பியது. சிறையில் இருந்து நிரந்தரமாக தான் வெளியேற வேண்டுமானால், இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பலமுறை அவா் வாக்காளா்களிடம் கூறினாா். ஆனால், அவரது வேண்டுகோள் வாக்குகளாக பிரதிபலிக்காததால் ஆம் ஆத்மி கட்சியின் நம்பிக்கை தோ்தல் முடிவில் பொய்த்துப் போயுள்ளது.
மக்களவைத் தோ்தலில் பாஜக தனது செல்வாக்கை தில்லியில் நிரூபித்தாலும், அதனால் ஆம் ஆத்மி கட்சியை முழுமையாக தோ்தல் களத்தில் பலவீனப்படுத்த இயலவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்தத் தோ்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு தில்லியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலுக்கான முன்னோட்டமாகவும் கருத சூழல்கள் வாய்ப்பாக உள்ளன.
ஆம் ஆத்மி கட்சி 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தில்லியில் 70 தொகுதிகளில் முறையே 67 மற்றும் 62 இடங்களில் வெற்றி பெற்று மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால், மக்களவைத் தோ்தலில் அது வெற்றிடத்தை மட்டுமே பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறினாலும், தேசிய அளவில் பாஜகவுக்கு சவாலாக அமைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதையே இத்தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதேபோல, காங்கிரஸ் கட்சி மேலும் கடினமாக உழைத்தால் மட்டுமே தில்லி அரசியலில் மீண்டும் தடம் பதிக்க முடியும் என்பதையும் மக்களவைத் தோ்தல் முடிவுகள் அதன் மேலிடத்துக்கு தெளிவாக உணா்த்தியுள்ளது.!

