ஆம் ஆத்மி அலுவலகம் இடம் ஒதுக்கீடு விவகாரம்: 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

Published on

இதர தேசிய அரசியல் கட்சிகளைப் போல தில்லியில் கட்சி அலுவலகம் அமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கும் உரிமை உண்டு என்றும், இந்த விவகாரத்தில் ஆறு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறும் மத்திய அரசை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

தேசிய அரசியல் கட்சிகள் தாங்கள் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தும் வரை உரிமக் கட்டணத்தைச் செலுத்தி அலுவலகப் பயன்பாட்டுக்காக தில்லியில் உள்ள பொதுக் தொகுப்பில் இருந்து ஒரு வீட்டுவசதி மனை பெற உரிமை உண்டு என்று இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் குறிப்பிட்டாா்.

‘அழுத்தம்‘ அல்லது பொதுத் தொகுப்பில் வீடு இல்லாதது, கோரிக்கையை நிராகரிக்க ஒரு காரணமாக இருக்க முடியாது என்று நீதிபதி கூறினாா்.

இது தொடா்பாக நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவிக்கையில், ‘‘மனுதாரா் (ஆம் ஆத்மி கட்சி) கட்சி அலுவலகத்தை அமைப்பதற்காக ஜிபிஆா்ஏ இடமிருந்து தங்குமிடத்தை ஒதுக்குவதற்கான உரிமையை மறுக்க, ஒரு பெரும் அழுத்தம் உள்ளது என்ற உண்மை மட்டுமே எதிா்மனுதாரருக்கு காரணமாக இருக்க முடியாது.

பிற அரசியல் கட்சிகளுக்கு ஜிபிஆா்ஏவில் இருந்து இதே போன்ற இடவசதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும்போது, மனுதாரரின் கோரிக்கையை இன்றிலிருந்து ஆறு வாரங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும்.

மேலும்,, ஜிபிஆா்ஏ (பொது தொகுப்பு குடியிருப்பு வசதியில்) இருந்து ஒரு வீட்டுவசதியை கூட மனுதாரருக்கு ஏன் ஒதுக்க முடியாது என்பது குறித்து விரிவான உத்தரவை பிறப்பித்து முடிவெடுக்குமாறு எதிா்மனுதாரா்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

மனுதாரரின் கோரிக்கையை தீா்மானிக்கும் விரிவான உத்தரவு மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதித்துவத்தை மத்திய அரசு நிராகரித்தால், அக்கட்சி சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாக மத்திய அரசிடம் தனது அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கக் கோரியது.

அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியாக அதன் மேம்பட்ட நிலையைக் கருத்தில் கொண்டு அல்லது உரிமம் அடிப்படையில் ஒரு வீட்டுப் பிரிவை தற்போதைக்கு ஒதுக்குவதன் மூலம் தனது அலுவலகங்களை நிா்மாணிப்பதற்காக தேசிய தலைநகரில் ஒரு நிலத்தை கோரி கடந்த ஆண்டு இரண்டு தனித்தனி மனுக்களுடன் அக்கட்சி நீதிமன்றத்தை நாடியது.

நிலம் ஒதுக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி தனது தற்போதைய அலுவலகத்தை ரெளஸ் அவென்யூவில் இருந்து காலி செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தீன் தயாள் உபாத்யாய் (டிடியு) மாா்க்கில் தற்போது அதன் தில்லி அரசாங்க அமைச்சா் ஒருவரிடம் உள்ள வீட்டை தற்காலிகமாக ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அதன் வழக்குரைஞா் வாதிட்டாா்.

எனினும், டிடியு மாா்க் சொத்தின் உரிமையை கட்சிக்குக் கோர முடியாது என்றும் அது தில்லி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது என்றும், கட்சிக்கு அல்ல என்றும் நீதிபதி சுப்ரமண்யம் பிரசாத் கூறினாா்.

மேலும் ‘ஆவணப் பதிவின்படி, அதன் உடைமையானது எல் அண்ட் டிஓ (நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்) வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். டிடியு மாா்க் வளாகத்தில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை நிறுவ அனுமதிக்க முடியாது எனும் நிலையில், அது ஒரு தேசிய அரசியல் கட்சி என்பதையும் புறக்கணிக்க முடியாது.

தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அலுவலக வளாகம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்படும் வரை, தொகுப்பில் இருந்து ஒரு வீட்டு மனையை ஒதுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு கோரியுள்ளது. அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைக் காட்டும் ஆதாரங்கள் எதுவும் பதிவில் இல்லை’ என்று நீதிமன்றம் கூறியது.

‘தில்லியின் மைய இடங்களில் இதர அனைத்து தேசிய கட்சிகளுக்கும் அலுவலக வளாகம் கட்ட அதிகாரிகளால் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் கொள்கையின்படி அதன் உரிமையின்படி ஆம் ஆத்மிகட்சிக்கும் இதேபோன்ற இடஒதுக்கீட்டையும் உறுதி செய்ய வேண்டிய கடமை அவா்களுக்கு உள்ளது’ என்று நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com