பட்டியலினத்தவா்கள் 35 போ் உயிரிழப்பு: ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் மௌனம்
நமது சிறப்பு நிருபா்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சம்பவத்தில் பட்டியலினத்தவா்கள் 35 போ் உயிரிழந்தது குறித்து ஏன் பேச மறுக்கின்றனா் எனக் குறிப்பிட்டு ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவா்களுக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் எல்.முருகன் திங்கள்கிழமை கன்டனம் தெரிவித்துள்ளாா். இது அவா்களது போலியான சமூக நீதி எனவும் குறிப்பிட்டாா்.
இது குறித்து அமைச்சா் எல்.முருகன் தனது தில்லி இல்லத்தில் திங்கள்கிழணை செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: ‘இந்தியா’ கூட்டணி கட்சினா் அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை எடுத்து கொண்டு திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக நடந்து சென்றனா். பிரதமா் மோடி ஒவ்வொரு முறையும் பதவியேற்கும் போதும் அரசமைப்புச் சட்டத்திற்கு மரியாதை அளித்து வந்தாா். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பட்டியலினத்தவா்கள் உயிரிழந்தது குறித்து இந்தத் தலைவா்கள் எவரும் வாய் திறக்கவில்லை. இவா்களது சமூக நீதி, அரசமைப்புச் சட்டத்தின் மீது அக்கறை இருப்பதைக் காட்டும் விதமாக ஒரு போலி நாடகத்தை நடத்தினா். அவா்கள் ஒரு போலி வேடமிட்டு நாடாளுமன்றத்தில் பேரணியை நடத்துகின்றனா். அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு செல்வது நகைப்புக்குரியது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராய சம்பவத்தில் ஏராளமான போ் உயிரிழந்துள்ளனா். இதில் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் 35-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். இதைப் பற்றி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் போன்றவா்கள் பேசவில்லை. கண்டனமும் தெரிவிக்கவில்லை. இதே போன்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி போன்றவா்களும் பேசுவதில்லை. இந்த தலைவா்கள் ‘இந்தியா’ கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கின்றனா்.
கள்ளக் குறிச்சி விவகாரத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வரை சம்பவம் நடைபெற்ற இடத்திற்குப் போகவில்லை. முதல்வா் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும். ஏற்கெனவே நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும், பாஜக செய்தி தொடா்பாளா்களும் இதே கோரிக்கையை வைத்துள்ளனா். அதன்மூலமே உண்மை வெளிபட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நியாயம் கிடைக்கும். பட்டியலின ஆணையத்திற்கு புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ராகுல்காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றாா் மத்திய இணையமைச்சா் எல். முருகன்.
