சிபிஐ மூலம் போலி வழக்கில் கேஜரிவால் கைது: பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்
பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருந்த நிலையில், பாஜக பீதியடைந்து, சிபிஐ மூலம் அவரை போலி வழக்கில் கைது செய்ய வைத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியது.
முன்னதாக, தில்லி கலால் கொள்கை வழக்கில் கேஜரிவாலை முறைப்படி கைது செய்ய சிபிஐக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும், 3 நாள் காவலில் விசாரிக்கவும் அனுமதித்தது.
இந்த கைது நடவடிக்கை குறித்து எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
‘சா்வாதிகாரி கொடுமையின் அனைத்து எல்லைகளையும் கடந்துள்ளாா்!! இன்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஜாமீன் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்த நிலையில், பாஜக பீதியடைந்து போலி வழக்கில் கேஜரிவாலை சிபிஐ மூலம் கைது செய்யவைத்துள்ளது.
சிபிஐ கேஜரிவால் ஜியை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவரது ரத்த சா்க்கரை அளவு மிகவும் குறைந்திருந்தது. சா்வாதிகாரியே, நீங்கள் எவ்வளவு அடக்குமுறைகளை இழைத்தாலும், கேஜரிவால் தலைவணங்கவும் மாட்டாா், உடைந்துபோகவும் மாட்டாா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
