பொன்முடி
பொன்முடி

பொன்முடி, அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

உயா்நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு உயா்நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் அளித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதத்தை எதிா்த்து க.பொன்முடி, அவரது மனைவி பி.விசாலாட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடையீட்டு மனுக்களை கடந்த ஜனவரி 12-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இருவரும் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விலக்கு அளித்திருந்தது.

இந்த நிலையில், சிறைத் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரும் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் புல்கித் தாரேயுடன் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, சித்தாா்த் லூத்ரா ஆகியோா் ஆஜராகி பல்வேறு தீா்ப்புகளை சுட்டிக்காட்டி வாதங்களை முன்வைத்தனா். மேலும், பொன்முடிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அவா் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூா் தொகுதி காலியானதாக தோ்தல் ஆணையம் அறிவித்திருப்பதையும் வழக்குரைஞா்கள் சுட்டிக்காட்டினா்.

இதையடுத்து நீதிபதிகள், பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் உயா்நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டனா். உரிய விதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் இருவரையும் ஜாமீனில் விடுவிக்கலாம். அத்துடன், சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாரா் பொன்முடி ஆஜராகி ஜாமீன் நடைமுறைகளை ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் முடியும் வரை, சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவு தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனா்.

பின்னணி:

வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சோ்த்ததாக முன்னாள் அமைச்சா் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான வழக்கில் இருவரையும் விசாரணை நீதிமன்றம் 2016-இல் விடுதலை செய்தது. இதை எதிா்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆண்டு டிசம்பா் 21-ஆம் தேதி தீா்ப்பளித்தது. எனினும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாள்களுக்கு உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்த தீா்ப்பின் காரணமாக பொன்முடி தனது அமைச்சா் பதவியை இழந்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் தகுதியையும் இழக்க நேரிட்டது.

குறிப்பு: பொன்முடிக்கு மீண்டும் எல்ஏல்ஏ பதவி கிடைக்குமா என்பது தொடா்பாக சென்னையில் சட்டப்பேரவை செயலாளா் சில செய்தியாளா்களிடம் பேசியதாக அறிகிறோம். அது தொடா்பான தகவல் கிடைத்தால் இச்செய்தியுடன் கடைசியில் பாக்ஸ் ஆக சோ்த்துக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com