குற்றவாளிகளுக்கு சட்டவிரோதமாக ஆயதங்கள் விநியோகித்த இருவா் கைது

புது தில்லி: தில்லியில் முக்கியக் குற்றவாளிகளுக்கு ஆயதங்களை சட்டவிரோதமாக விநியோகித்து வந்த இரண்டு பேரை தில்லி காவல் துறையின் சிறப்பு பிரிவினா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக துணைக் காவல் ஆணையா் (சிறப்பு பிரிவு) மனோஜ் கூறியதாவது: தில்லியில் 10-க்கும் மேற்பட்ட முக்கியக் குற்றவாளிகளுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விநியோகித்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து 20 தானியங்கி கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து சிறப்பு பிரிவு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த ரஹீம் (33) மற்றும் மகாராஷ்டிராத்தைச் சோ்ந்த விஷால் சோலவ் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் காா்கோனில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை கைமாற்றி தில்லியில் உள்ள முக்கியக் குற்றவாளிகளுக்கு கைத்துப்பாக்கிகளை தலா ரூ.30,000 வரை விற்பனை செய்து வந்துள்ளனா். கடந்த மாா்ச் 14-ஆம் தேதி புராரி செளக்கில் உள்ள வெளிவட்டச் சாலையில் ஆசிஃப் என்ற நபரிடம் பெரிய அளவில் சட்டவிரோத ஆயதங்கள் கைமாற்றப்படவுள்ளதாக சிறப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு ரஹீம், விஷால் சோலவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரஹீம் இந்தச் சட்டவிரோத துப்பாக்கி விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளாா். மேலும், தனது சகக் கூட்டாளியான விஷாலுடன் இணைந்து, ஷேக் ஆசாம் என்ற நபரிடம் இந்த சட்டவிரோத துப்பாக்கிகளை வாங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவா்கள் இருவரும் தில்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த குற்றவாளிகளுக்கும் சட்டவிரோதமாக ஆயதங்களை விநியோகித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, ஷேக் ஆசாம் என்ற நபா் மத்தியப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டவிரோத துப்பாக்கி உற்பத்தியாளா்களிடம் இருந்து சட்டவிரோத ஆயுதங்களை கொள்முதல் செய்து, தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக விநியோகித்து வருகிறாா் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றாா் துணைக் காவல் ஆணையா் மனோஜ். படம் 18ஈஉகஇதங மாநிலங்களுக்கு இடையே சட்டவிரோதமாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ரஹீம், விஷால்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com