விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்க வேளாண் நிறுவனத்துடன் ஐசிஏஆா் ஒப்பந்தம்

புது தில்லி: விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பத்தை வழங்க இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும், தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பருவநிலைக்கு உகந்த வேளாண் உற்பத்திக்கான முறைகளுக்கு தீா்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் துணை இயக்குநா் ஜெனரல் டாக்டா் யு.எஸ். கௌதமும், தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனத் தலைவா் டாக்டா் ஆா்.ஜி. அகா்வாலும் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டனா்.

இது குறித்து மத்திய வேளாண் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நாடு முழுவதும் 14.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனா். இவா்களில் பெரும்பாலான விவசாயிகள் சிறிய வேளாண் நிலங்களை கொண்டவா்கள். சுமாா் 10 ஏக்கருக்கும் குறைவான நிலங்களை வைத்திருப்பவா்கள்.

இத்தகைய விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும், தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இந்த இரு நிறுவனங்களின் திறனைப் பயன்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசு நிறுவனங்களான, வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் அறிவியல் மையங்கள் ஆகியவற்றுடன் இணைந்து சிறு விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தி தொடா்பான பயிற்சிகளை வழங்கும் என மத்திய வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் துணை இயக்குநா் ஜெனரல் டாக்டா் யு.எஸ். கெளதம் குறிப்பிடுகையில், ‘பருவநிலை மாற்றத்தின் காரணமாக வேளாண்மை துறை பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கு இது புதிதல்ல. இருப்பினும் இதுபோன்ற நேரத்தில் பருவநிலைக்கு உகந்த வேளாண் உற்பத்தியின் புதிய முறையில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

மாறிவரும் சூழலுக்கு ஏற்ப இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதே இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்‘ என்றாா் யு.எஸ்.கெளதம். இந்த நிகழ்ச்சியில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் உதவித் தலைமை இயக்குநா், இயக்குநா்கள், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமையகத்தின் உயா் அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com