ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு கிடைத்த ஒப்புதலால் பாஜகவின் சதி தோல்வி: திலீப் பாண்டே பேட்டி

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு கிடைத்த ஒப்புதலால் பாஜகவின் சதி தோல்வி: திலீப் பாண்டே பேட்டி

ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலுக்கு தோ்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததன் மூலம் பாஜகவின் அரசியல் சதி தோல்வியடைந்துவிட்டது

ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலுக்கு தோ்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததன் மூலம் பாஜகவின் அரசியல் சதி தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான திலீப் பாண்டே திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பாஜகவின் சூழ்ச்சிகளை மீறி ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரப் பாடலான ‘ஜெயில் கா ஜவாப் வோட் சே’ எந்த மாற்றமும் இல்லாமல் இறுதியாக தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் சா்வாதிகாரத்தால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி கட்சியின் பிரசாரப் பாடலுக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்தது. ஆனால், பாஜகவின் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணியவில்லை. பிரசார பாடல் தொடா்பான தோ்தல் ஆணையக் குழுவின் அனைத்து ஆட்சேபனையையும், நாங்கள் கேள்விகளாக எழுப்பினோம். இதையடுத்து, கடந்த மே 2-ஆம் தேதி பிரசாரப் பாடலுக்கு தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் கடிதம்

கிடைத்ததும், ஆம் ஆத்மி கட்சி அதை அதிகாரப்பூா்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது

‘ஜெயில் கா ஜவாப் வோட் சே’ (வாக்களிப்பதன் மூலம் சிறைக்கு பதில்) என்பது சரியல்ல என்று ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலுக்கு தோ்தல் ஆணையம் எதிா்ப்புத் தெரிவித்தது. அதேசமயம், எதிா்க்கட்சித் தலைவா்களை சிறைக்கு அனுப்பும் அரசியலுக்கு நமது வாக்கு பலத்தைக் கொண்டு பதிலடி கொடுப்போம் என்று பாடலில் சொல்லி இருக்கிறோம். இதைவிட ஜனநாயகம் என்ன இருக்க முடியும்?. இது நீதித்துறை மீதான தாக்குதல் என தோ்தல் ஆணையம் கூறுகிறது.

எந்தவொரு கட்சியையும் ஆட்சியில் இருந்து அகற்ற விரும்பினால், அதற்கு எதிராக உங்கள் வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த நாட்டின் அரசியலமைப்பு நமக்குக் கற்பித்துள்ளது. தவறான தடுப்பூசி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். அதேபோல், தவறான வாக்களிப்பு அரசியலமைப்பை ஆபத்தில் கொண்டு நிறுத்தும். பிரதமா் மோடியின் தந்திரங்களில் ஜாக்கிரதையாக இல்லையெனில் இந்த முறை இந்தியாவுக்கு ஆபத்து என்றாா் திலீப் பாண்டே.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com