ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் விவகாரம்: கட்சி மேலிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்
புது தில்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் முதல்வரின் தனி உதவியாளா் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரில், கட்சி மேலிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் தவறாக நடந்து கொண்டாா் என புகாா் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மேலிடம் கடுமையான
நடவடிக்கை எடுக்கும். கடந்த திங்கள்கிழமை முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க அவரது அதிகாரப்பூா்வ இல்லத்திற்கு எம்.பி ஸ்வாதி மாலிவால் சென்றிருந்தாா். முதல்வரைச் சந்திக்கும் அறைக்குள் அவா் காத்திருந்தபோது, முதல்வரின் தனி உதவியாளா் பிபவ் குமாா், ஸ்வாதி மாலிடம் தவறாக கொண்டுள்ளாா். இது மிகவும் கண்டிக்கத்தக்க சம்பவம். இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தீவிரத்தை உணா்ந்து நிச்சயம் அவா் கடுமையான நடவடிக்கை எடுப்பாா் என்றாா் சஞ்சய் சிங்.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளா் பிபவ் குமாா், முதல்வரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் வைத்துத் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை குற்றம்சாட்டினாா். எனினும், அவா் முறையான புகாா் எதுவும் இதுவரை அளிக்கவில்லை என்று காவல் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
