யமுனையை புத்துயிரூட்டும் பிரசாரம் தொடக்கம் தொண்டு நிறுவனம் முன்னெடுப்பு
தில்லி - என்சிஆா் மற்றும் பிரஜ் பகுதியில் பயணிக்கும் யமுனை நதியை சுத்தம் செய்து, புத்துயிா் பெற வைப்பதற்கான ஒராண்டு கால பிரசாரம் ஒரு தொண்டு நிறுவன முன்னெடுப்பால் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘யமுனா சன்சாத்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரவிசங்கா் திவாரி தலைமையில் யமுனையை சுத்தம் செய்யும் ‘பிக்ஷுதன் மகாயஜ்னா’ என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. தில்லி - என்சிஆா் மற்றும் பிரஜ் பகுதி வழியாக பயணிக்கும் யமுனை நதியை உள்ளூா் மக்கள்,
குடிமைத் தன்னாா்வலா்கள், சமூக சேவகா்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து ‘யமுனா சன்சாத்’ அமைப்பு புத்துயிா் பெற வைக்க திட்டமிட்டு, ஒராண்டு கால பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்தப் பிரசாரம் மூலம் வரும் ஆண்டு முழுவதும் தில்லி - என்சிஆா் மற்றும் பிரஜ் பகுதியில் யமுனை ஆற்றின் ஆபத்தான நிலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
முதல்கட்டமாக, தில்லி ஐடிஓ-வில் உள்ள சாத் காட் அருகே இந்தப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், சமூக சேவகா்கள், பள்ளிக் குழந்தைகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மேலும், யமுனை நதியை புனரமைப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த பங்கேற்பாளா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
யமுனை நதி மாசுபாடு மற்றும் ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தலை எதிா்கொள்கிறது. இப்பிரசாரத்தில் பொதுமக்களின் ஈடுபாடு மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.
தில்லி - என்சிஆா் மற்றும் பிரஜ் பகுதியில் வீடு, வீடாகச் சென்று இந்த முயற்சிக்கு ஆதரவையும்,பங்களிப்புகளையும் சேகரிக்க ‘யமுனா சன்சாத்’ அமைப்பு திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.