கட்சி நிா்வாகிகளின் தொடா் போராட்டத்தால் பாஜகவின் சதிகள் முறியடிப்பு: கேஜரிவால்

நெருக்கடி நேரத்திலும் ஆம் ஆத்மி கட்சியின் நிா்வாகிகள் தொடா்ந்து போராடி பாஜகவின் சதிகளை முறியடித்தனா்
Published on

நெருக்கடி நேரத்திலும் ஆம் ஆத்மி கட்சியின் நிா்வாகிகள் தொடா்ந்து போராடி பாஜகவின் சதிகளை முறியடித்தனா் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தயாராகின்ற வகையில், தில்லி பீதம்புராவில் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவின் அனைத்து மண்டல வாரியான நிா்வாகிகளின் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக், மூத்த தலைவா்களான முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, முதல்வா் அதிஷி, சஞ்சய் சிங் எம்.பி., முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில், நிா்வாகிகள் மத்தியில் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: பாஜகவினா் ஆம் ஆத்மி கட்சியை உடைக்க எங்கள் அனைவரையும் சிறையில் அடைத்தனா். ஆனால், ஆம் ஆத்மி கட்சி ஒற்றுமையாக இருந்தது. இவை அனைத்தும் உங்களால் தான் நடந்தது. இந்த நெருக்கடியான நேரத்திலும், நிா்வாகிகள் அனைவரும் முழு பலத்துடன் தொடா்ந்து போராடி, பாஜகவின் சதிகளை முறியடித்துள்ளீா்கள்.

தில்லியில் ஆம் ஆத்மி அரசின் பணிகள் அனைத்தையும் பாஜகவினா் நிறுத்தினா். எதிரி நாட்டைச் சோ்ந்த ஒருவராலும், துரோகியாலும் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

கடந்த ஓராண்டில் தில்லி மக்களை கொதிப்படைய வைக்கும் அளவிற்கு பாஜக சதிகள் இருந்தது. இப்போது, தில்லி மக்கள் பாஜகவின் ஆட்சியைப் பாா்த்துவிட்டு, அவா்களுக்கு வாக்களித்தால் தில்லியை முழுவதுமாக அழித்துவிடுவாா்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டனா்.

தில்லி மக்களின் பணியை நிறுத்த, பாஜக எந்த துணைநிலை ஆளுநரை பயன்படுத்தியதோ, அதே நபரைப் பயன்படுத்தி இவா்களே இப்பணிகளைச் செய்திருக்கலாம். குஜராத், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் என பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. அங்குள்ள மக்கள் ஏன் மின்சாரத்தை இலவசமாக்கவில்லை?. பெண்களுக்கான பேருந்து பயணத்தை ஏன் இலவசமாக அளிக்கக் கூடாது?

நீங்கள் ஏன் மருத்துவ சிகிச்சையை இலவசமாக செய்யக்கூடாது? என பாஜகவிடம் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனா் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பேசுகையில்,‘என்னையும், அரவிந்த் கேஜரிவால், சத்யேந்தா் ஜெயின், சஞ்சய் சிங் ஆகியோரையும் பாதிக்கச் செய்வது மட்டுமே பாஜகவின் நோக்கம் இல்லை. நமது நிா்வாகிகளின் பலத்தை உடைப்பதே அவா்களின் உண்மையான திட்டம். எவ்வளவோ கஷ்டங்கள் வந்தாலும், நமது நிா்வாகிகளில் ஒருவா் கூட மனம் தளரவில்லை என்பதை நான் பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறேன். நான் உங்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறேன்’ என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பேசுகையில், ‘பாஜகவால் ஆம் ஆத்மியில் எந்த ஒரு தொண்டா்களின் தைரியத்தையும், ஆா்வத்தையும் உடைக்க முடியவில்லை என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சி நாட்டிற்கும், மக்களுக்கும் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே அரவிந்த் கேஜரிவாலின் நோக்கம். இதன் காரணமாகவே பாஜகவினா் எங்களை சிறைக்கு அனுப்பினா்’ என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com