புது தில்லி: தில்லி அரசின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ரூ.5,000 ஆக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தலைநகா் தில்லியில் சுமாா் 2 லட்சத்து 82 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். அவா்களில் சுமாா் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தில்லி அரசின் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியமாக ரூ.2500 வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் விதிகளின்படி, 42 சதவீதத்துக்கும் அதிகமான ஊனம் உள்ளவா்களுக்கு அரசின் யு.டி.ஐ.டி. அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டை பெறுபவா்களுக்கு மட்டுமே ஓய்வூதிய உரிமை உள்ளது.
இந்த நிலையில், தில்லி ஆம் ஆத்மி அரசு அடையாள அட்டை கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது. தில்லி அரசு இனி மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.5,000 நிதியுதவி அளிக்கும். நாட்டிலேயே இவ்வளவு பெரிய தொகையை வழங்கும் ஒரே மாநிலம் தில்லிதான். எங்கள் அரசு நோ்மையாக செயல்படுகிறது. தில்லி அரசு நஷ்டத்தில் இயங்குகிறது என்று வதந்திகளை பரப்பி வரும் பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எங்களின் இந்த முடிவு அமைந்துள்ளது.
பாஜக மோசமான மனநிலையில் உள்ளது. அவா்கள் 10,000 பேருந்து மாா்ஷல்களை பணிநீக்கம் செய்தனா். தற்போது, தில்லி மகளிா் ஆணையத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் 225 பெண்களை பணிநீக்கம் செய்துள்ளனா். இதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் சமூகத்தால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் பணியில் இருந்தனா் என்றாா் செளரவ் பரத்வாஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.