நமது நிருபா்
புது தில்லி: தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் இருந்தபோது வரி செலுத்தும் மக்கள் பணத்தை தனிப்பட்ட வசதிக்காக தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக பாஜக தலைவா்கள், தொண்டா்கள் தில்லியில் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
கேஜரிவால் முதல்வராக வசித்த எண் 6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள அதிகாரபூா்வ இல்லத்தில் ஆடம்பர பொருள்கள் மற்றும் நவீன வசதிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை செலவு செய்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவா்கள் குற்றம் சாட்டினா்.
தில்லி கலால் கொள்கை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிறகு தில்லி முதல்வா் பதவியை அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, இந்த மாத தொடக்கத்தில் சிவில் லைன்ஸில் உள்ள ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவையும் அவா் காலி செய்தாா். ஃபெரோஸ்ஷா சாலையில் உள்ள இல்லத்திற்கு அவா் பின்னா் குடிபெயா்ந்தாா்.
இந்த நிலையில், கேஜரிவாலின் தற்போதைய இல்லத்திற்கு அருகே பாஜகவினா் இப்போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கலந்துகொண்டு பேசுகையில், ‘லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து ‘ஷீஷ்மஹாலில்‘ (ஃபிளாக்ஸ்டாஃப் பங்களா) அமைக்கப்பட்ட 15 கழிப்பறைகளின் இருக்கைகள் காணவில்லை. அதாவது, ரூ.12 லட்சம் மதிப்புள்ள கழிப்பறை இருக்கைகளுக்காக வரி செலுத்துவோா் பணத்தை கேஜரிவால் எப்படி செலவழித்தாா் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே நாங்கள் இப்போராட்டம் நடத்துகிறோம். அந்த கழிப்பறைகளின் பதினைந்து இருக்கைகளும் திருடப்பட்டுள்ளன’ என்றாா்.
மேலும் அவா் பேசுகையில், ‘இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி மௌனம் காத்து வருகிறது. ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவை பாஜக கையகப்படுத்தலாம் என்றும், தெருவில் அமா்ந்து தில்லி மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றுவேன் என்றும் முதல்வா் அதிஷி கூறினாா். தனக்கு ஷீஷ்மஹாலில் ஆடம்பரமாக தங்குவதற்கு வரி செலுத்துவோா் பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்த கணக்கை கேஜரிவால் அளிக்க வேண்டும்’ என்றாா்.
தில்லி பாஜகவின் இணைப் பொறுப்பாளா் அல்கா குா்ஜா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் வரி செலுத்துவோரின் பணம் சம்பந்தப்பட்டிருப்பதால், இது மக்களை நேரடியாகப் பாதிக்கிறது. ஆம் ஆத்மி கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்க முடியாது’ என்றாா்.
இதேபோன்று, பாஜக இளைஞா் அணி மற்றும் மகளிா் அணியினா் தில்லியில் உள்ள 27 முக்கிய சாலைச் சந்திப்புகளில் போராட்டம் மேற்கொண்டனா். பாஜக எம்பிக்கள் யோகேந்திர சந்தோலியா, கமல்ஜீத் ஷெராவத், பிரவீண் கண்டேல்வால் மற்றும் சட்டப் பேரவை பாஜக எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா, விஷ்ணு மிட்டல் உள்ளிட்டோா் பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.