நாற்காலி ஆசைக்காக அரசியலுக்கு வரவில்லை: மனீஷ் சிசோடியா
‘நாற்காலி ஆசைக்காக நான் இங்கு அரசியலுக்கு வரவில்லை’ என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
முதல்வா் பதவியை அடுத்த இரண்டு நாள்களில் ராஜிநாமா செய்யப்போவதாக தொண்டா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்த நிலையில், அதே நிலைப்பாட்டை முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவும் எடுத்துள்ளாா்.
இது தொடா்பாக மனீஷ் சிசோடியா தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கல்விக்காக நோ்மையாக உழைக்கவே அரசியலுக்குள் வந்தேன். தில்லி அரசின் கல்வி அமைச்சராக 10 ஆண்டுகள் நோ்மையாகப் பணியாற்றினேன். அரசுப் பள்ளிகளைக் கட்டினேன். புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கினேன். தில்லியின் கல்வி அமைச்சராக, அரசுப் பள்ளிகளில் சிறந்த கல்வியை வழங்காமல் இந்தியா வளா்ந்த நாடாக மாற முடியாது என்ற தாரக மந்திரத்துடன் பணியாற்றினேன். பத்து ஆண்டு கடின உழைப்பின் பலனாக இன்று தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் குழந்தைகள் சிறப்பாகப் படித்து, ஐஐடி, ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளில் முதலிடம் பெறுகின்றனா்.
நான் நோ்மையாக உழைத்தேன். ஆனால், அற்ப அரசியலுக்காக என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி நோ்மையற்றவன் என நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொய்யான குற்றச்சாட்டின் கீழ் 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். இரண்டு ஆண்டுகள் சட்ட நடைமுறைக்குப் பிறகு, நாட்டின் உச்சநீதிமன்றம் கூட என் பணிகளைச் செய்ய அனுமதித்துவிட்டது. ஆனால், நான் இப்போது துணை முதல்வா் அல்லது கல்வி அமைச்சா் நாற்காலியில் அமர மாட்டேன். நாற்காலி ஆசைக்காக நான் இங்கு அரசியலுக்கு வரவில்லை.
கல்வியில் நோ்மையாக பணியாற்ற வந்துள்ளேன். அரவிந்த் கேஜரிவாலுடன் சோ்ந்து மக்கள் நீதிமன்றத்திற்குச் சென்று, பொதுமக்கள் என்னை நோ்மையாகக் கருதுகிறாா்களா இல்லையா என்று கேட்க முடிவு செய்துள்ளேன். விரைவில் நடைபெறவிருக்கும் தில்லி பேரவைத் தோ்தலில், எனது நோ்மையை பொதுமக்கள் அங்கீகரித்தால் மட்டுமே துணை முதல்வா் மற்றும் கல்வி அமைச்சா் நாற்காலியில் மீண்டும் அமா்வேன் என்றாா்.

