
பெண் தலைவர்களுக்கு ஆதரவு அளிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதாவானது காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மகளிர் காங்கிரஸ் பிரிவு தொடங்கப்பட்டதன் 40-ஆவது ஆண்டு விழாவையொட்டி அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1984-இல் பெங்களூரில் நடைபெற்ற மாநாட்டைத் தொடர்ந்து மகளிர் காங்கிரஸ் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவு நாற்பது ஆண்டுகளாக நீதிக்கான அச்சமற்ற குரலாக இருந்து வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தீவிரமான முன்னணி பிரிவுகளில் ஒன்றாக இயங்கி வந்துள்ளது. மகளிர் காங்கிரஸின் ஆண்டு விழாவையொட்டி அதன் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். முதல் முறையாக ஆன்லைன் வாயிலாக உறுப்பினர் சேர்க்கையை நடத்தும் அந்தப் பிரிவுக்கு எனது வாழ்த்துக்கள்.
எனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க அளவிலான பெண்களைச் சந்தித்தேன். பெண்களுக்கு எதிராக உள்ள ஒரு கட்டமைப்பில் மகளிர் காங்கிரஸில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தில் தங்களுக்குரிய பங்கைக் கோரி போராட வேண்டும். பெண் தலைவர்களை அடையாளம் காணவும் ஆதரவு அளிக்கவும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவானது காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பாகும்.
ஜாதி, வகுப்பு, மத வேற்றுமைகளைக் கடந்து பெண்கள் அதிக அளவில் அரசியலில் பங்களிப்பை வழங்க மகளிர் காங்கிரஸ் பிரிவு தொடர்ந்து பாடுபடும் என்று நம்புகிறேன். தனது எதிர்கால பெருமுயற்சிகளுக்காக மகளிர் காங்கிரஸுக்கு எனது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸ் வலைதலத்தில் வெளியிட்ட பதிவில் ’மகளிருக்கு முழு உரிமைகளையும் வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது. சுதந்திரப் போராட்டம் முதல் விண்வெளிப் பயணம் வரை தேசக் கட்டமைப்பில் நம் நாட்டின் பெண் சக்தி, ஆண்களுக்கு இணையான பங்களிப்பை வழங்கியுள்ளது. தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை பெண்களின் உரிமைகளுக்காக போராடுவதும், பெண்களுக்கான பாதுகாப்பின்மை, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், சமூக சுரண்டல், சமத்துவமின்மை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதும் மகளிர் காங்கிரஸின் பொறுப்பாகும்' என்று தெரிவித்துள்ளார்.