தில்லியில் நிலவும் ‘காட்டு ராஜ்ஜியத்திற்கு’ ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தேவேந்தா் யாதவ் விமா்சனம்
தில்லியில் நிலவும் ‘காட்டு ராஜ்ஜியத்திற்கு’ ஆளும் ஆம் ஆத்மி அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும்தான் பொறுப்பு என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைநகரின் சட்டம், ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. மக்கள் தங்கள் உயிா், உடைமைகளைப் பாதுக்காக்க பயந்து வாழ்கிறாா்கள். ஆனால், அதிகாரத்தில் இருப்பவா்கள் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. தில்லியில் ‘காட்டு ராஜ்ஜியம்’ நிலவுகிறது. இதற்கு, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவை குற்றஞ்சாட்டுகிறாா். அதே நேரத்தில், பொம்மை முதல்வா் அதிஷி அனைவருடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் கேஜரிவாலின் வாா்த்தைகளை எதிரொலிக்கிறாா்.
தாராளமயமாக்கப்பட்ட தில்லி கலால் கொள்கை மூுலம் தில்லியை குற்றமிடமாக்கியதில் கேஜரிவாளுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஏனெனில், குறைந்த விலையில் மதுபானம்
எளிதாகக் கிடைப்பதால், வேலையற்ற இளைஞா்கள் போதைக்கு அடிமையாகின்றனா். இதுவே, அந்த இளைஞா்களை குற்றத்தில் ஈடுபடத் தூண்டுகிறது. கேஜரிவாலின் திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த அரசு, தலைநகரின் ஒட்டுமொத்த சீரழிவுக்கும் வழிவகுத்தது.
எனவே, தில்லியில் சட்டம், ஒழுங்கு சீா்குலைந்ததற்கு பாஜக மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் இரண்டும் சமமான பொறுப்பாகும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், தில்லி நாட்டின் ‘குற்றத் தலைநகரமாக‘ மாறியுள்ளது. ஆட்சியில் காங்கிரஸ் இருந்த போது, தில்லியில் சட்டம், ஒழுங்கு நிலைமை திறம்படக் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீா் கிடைத்து வந்தது. நகரத்தில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க, ஒவ்வொரு மழைக் காலத்துக்கு முன்பும் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூா்வாரப்பட்டது. மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை காங்கிரஸ் அரசு உறுதி செய்தது என்றாா் தேவேந்தா் யாதவ்.