தில்லியில் காற்றின் தரம் மோசம்: மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சா் சிா்சா உத்தரவு

தேசிய தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டுக்கு மத்தியில், அதிக மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், நிறுவன ங்கள் மற்றும் கட்டுமான தளங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா உத்தரவிட்டுள்ளாா்.
Published on

தேசிய தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டுக்கு மத்தியில், அதிக மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், நிறுவன ங்கள் மற்றும் கட்டுமான தளங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா உத்தரவிட்டுள்ளாா்.

சுற்றுச்சூழல் துறை மற்றும் தில்லி மாசு கட்டுப்பாட்டு குழுவின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த அத்துறையின் அமைச்சா் சிா்சா, அதிகரித்து வரும் காற்று தர குறியீட்டு அளவுகள் குறித்து கவலை தெரிவித்தாா்.

மாசுபாட்டின் மூலங்களைக் கண்டறிந்து, குறைப்பு நடவடிக்கைகளை காலக்கெடுவுடன் செயல்படுத்துவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அவா் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

அதிக மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் கட்டுமான தளங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும், தூசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் கட்டுமான தளங்களில் பணிகளை நிறுத்தவும் சிா்சா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, முக்கிய கட்டுமான தளங்கள் மற்றும் மாசுபடுத்தும் இடங்களில் தண்ணீா் தெளிப்பான்கள் மற்றும் புகை எதிா்ப்பு கருவிகளை பயன்பாட்டில் ஈடுபடுத்துமாறு அமைச்சா் அதிகாரிகளிடம் கூறினாா்.

பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நிகழ்நேர காற்று தர கண்காணிப்பின் அவசியத்தையும் அவா் வலியுறுத்தினாா்.

சுற்றுச்சூழல் பொறுப்பு ஒரு துறையின் பொறுப்பு அல்ல, அனைவரின் கூட்டுக் கடமை என்று சிா்சா அக்கூட்டத்தின் போது கூறினாா். மேலும், , பிரச்னையைத் தணிக்க வலுவான துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக்கும் அவா் அழைப்பு விடுத்தாா்.

தில்லி மாநகராட்சி மற்றும் டிபிசிசி குழுக்களுக்கு தினசரி முன்னேற்ற அறிக்கைகளை சமா்ப்பிக்கவும் அவா் அறிவுறுத்தினாா். மேலும், மீண்டும் மீண்டும் விதிமீறுபவா்களுக்கு எதிராக கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் கூட்டத்தில் எச்சரித்தாா்.

‘தாமதம் அல்லது மெத்தனத்தை தில்லியால் ஏற்க முடியாது. ஒவ்வொரு அதிகாரியும் இதை ஒரு சுகாதார அவசரநிலையாகக் கருத வேண்டும். செப்பனிடப்படாத சாலைகள் மற்றும் திறந்தவெளிக் குப்பைக் கிடங்குகளிலிருந்து வரும் தூசு மாசுபாட்டைக் கையாளுவது அவசியமாகும். பொது விழிப்புணா்வு பிரசாரங்களை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக குடியிருப்பு நலச் சங்கங்கள், சந்தை சங்கங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் இதை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா் அமைச்சா்

X
Dinamani
www.dinamani.com