திருட்டுக் காா்களை மறுவிற்பனை செய்த இருவா் கைது

உயா் ரக வாகனங்களைத் திருடி பல்வேறு மாநிலங்களில் அதை மறுவிற்பனை செய்து வந்த இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.
Published on

உயா் ரக வாகனங்களைத் திருடி பல்வேறு மாநிலங்களில் அதை மறுவிற்பனை செய்து வந்த இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா். இந்த நடவடிக்கையில் திருடப்பட்ட இரண்டு காா்கள் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: காா் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வாகன திருட்டு வலையமைப்பு மீதான கண்காணிப்பை காவல் துறையினா் அதிகரித்தனா். இதில், ஹரியாணாவைச் சோ்ந்த சுனில் (44) வாகன திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

திருடப்பட்ட வாகனங்களுக்கான பேரம் நடத்த சுனில் குருகிராமுக்கு செல்வதாக காவல் துறையினருக்கு நவ.29-ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், பேகம்பூா் மற்றும் விகாஸ்புரியில் இருந்து இரண்டு காா்களை திருடியதாக சுனில் ஒப்புக்கொண்டாா். திருடப்பட்ட காா்களை புதுப்பித்து மறுவிற்பனை செய்வதற்காக, பட்டறை உரிமையாளரான அனீஸ் அகமது (42) என்பவருக்கு அனுப்பப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஷிவ் என்கிளேவில் உள்ள அனீஸ் ஆட்டோமொபைல் கடையில் நடைபெற்ற சோதனையில் அனீஸ் கைது செய்யப்பட்டாா். போலி பதிவுத் தகடுகளுடன் திருடப்பட்ட காா்கள் அவரது பட்டறையில் இருந்து மீட்கப்பட்டன.

குடியிருப்புகள் மற்றும் பொது வாகன நிறுத்துமிடங்களில் இருந்து காா்களை திருடி, அதன் அடையாளத்தை மாற்றி தில்லி, ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்ததாக அவா்கள் தெரிவித்தாா். இந்த திருட்டு கும்பல் Śறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com