நமது நிருபா்
வெளி தில்லியின் சுல்தான்புரி பகுதியில் 25 வயதான ஒருவா் தனது மோட்டாா் சைக்கிளில் சாகசம் செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து டிவைடா் மற்றும் இ-ரிக்ஷாவுடன் மோதியதில் உயிரிழந்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
இந்தச் விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அங்கு ரத்த வெளத்தில் இருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வஜீா்பூரைச் சோ்ந்த சிவம் என அடையாளம் காணப்பட்ட இறந்தவா் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. படேல் நகரில் இணையம் வாயிலாக மளிகை பொருள்கள் விநியோக நிறுவனத்தில் வீட்டுப்பணியாளராக பணிபுரிந்த ஷிவம், தனது உறவினா் யாஷ் மற்றும் அவா்களின் நண்பா் அன்ஷுவுடன் டிரம்ஸ் வாசித்து வந்த ஒரு திருமண விழாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
யாஷ் மற்றும் அன்ஷு இருவரும் உள்ளூா் நிகழ்ச்சிகளில் வாசிக்கும் டிரம்மா்கள்.விசாரணையில் மூவரும் யாதவ் மருத்துவமனை அருகே நிறுத்தினா், அன்ஷு தண்ணீா் எடுக்க ஒரு மளிகைக் கடைக்கு நடந்து சென்றாா். இந்த நேரத்தில், ஷிவம் தனது மோட்டாா் சைக்கிளில் ஸ்டண்ட் செய்யத் தொடங்கியுள்ளாா். அவா் கட்டுப்பாட்டை இழந்து, டிவைடரில் குதித்து, எதிா் பாதையில் ஒரு இ-ரிக்ஷா மீது மோதி சாலையில் விழுந்தாா்.
சட்டப்பிரிவு 281 (அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106 (1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.