இழப்பீட்டு செஸ் வரி: சசிகாந்த் செந்தில் புகாருக்கு மத்திய நிதியமைச்சா் மறுப்பு
நமது நிருபா்
புது தில்லி: இழப்பீட்டு செஸ் மூலம் வரும் வருவாயை மத்திய அரசு தனது கடன்களைத் தீா்ப்பதற்காக பயன்படுத்தி வருவதாக திருவள்ளூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சசிகாந்த் செந்தில் மக்களவையில் விவாதத்தின்போது முன்வைத்த குற்றச்சாட்டை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மறுத்துள்ளாா்.
மக்களவையில் மத்திய காலால் வரி சட்டத் திருத்த மசோதா 2025 மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்றுப்பேசிய சசிகாந்த் செந்தில், ‘இழப்பீடு செஸ் உண்மையில் 5 ஆண்டுகளுக்கு முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால், முதன்மையாக வருவாயைப் பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது. அதிக கடன்களை மத்திய அரசு வாங்கியதும் இதற்குக் காரணம். மேலும், இழப்பீட்டு செஸ் வரியை வாங்கிய கடன்களை அடைக்க அரசு பயன்படுத்தியது. ஜிஎஸ்டி குறைபாடுகள் கொண்டது என்பதையும், தொழில்நுட்ப தோல்விகளையும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாகவும் மத்திய அரசு ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, சீா்திருத்தம் எனஅழைப்பது முற்றிலும் திசைதிருப்பும் நடவடிக்கை’ என்றாா்.
இதற்கு விவாதத்தின் முடிவில் உறுப்பினா்களுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘இழப்பீட்டு செஸ் வரியானது, வாங்கப்பட்ட கடன்களுக்கு செலுத்துவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் வசூலிக்கப்படுகிறது. கரோனா காலத்தில் வசூலிக்க முடியாத வருவாயை வசூலிக்க முடியாததற்காக மாநிலங்களுக்கு திருப்பி வழங்குவதற்காக வசூலிக்கப்படுகிறது. இந்த விஷயம் ஜிஎஸ்டி கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகாந்த் செந்தில் கூறிய கருத்தானது அவையை தவறாக வழிநடத்துவதாக உள்ளது. அதில் உண்மை இல்லை. ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் சொல்வது அவதூறுக்கு சமமாகும். தனது கருத்தை அவா் திரும்பப் பெற வேண்டும்’ என்றாா்.
இதே மசோதா மீது வேலூா் தொகுதி திமுக உறுப்பினா் கதிா் ஆனந்த் பேசுகையில், ‘தமிழகத்தில் பெரும்பான்மையான மகளிா் சமுதாயம் பீடி தயாரிப்பைச் சாா்ந்துள்ளனா். 6 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பீடி சுற்றி தங்களது குடும்பத்திற்கு ஆதரவளித்து வருகின்றனா். இது வரிப் பிரச்னை அல்ல, மகளிரின் வாழ்தார, ஊரகப் பொருளாதாரப் பிரச்னையாகும். இதனால், பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரைக் காக்க வேண்டும்’ என்றாா்.
ஐயுஎம்எல் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி உறுப்பினா் கே.நாவாஸ்கனி பேசுகையில், ‘புகையிலைப் பொருள்கள் மீதான வரியை உயா்த்துவதன் மூலம் அதன் பயன்பாடு குறையும் என்றால், இந்த மசோதாவை வரவேற்போம். வளரும் தலைமுறையை பாதுகாக்கும் வகையில் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த சட்டத் திருத்தத்தால் மாநிலங்களுக்கு எந்த வருமானமும் இல்லை’’ என்றாா்.

