காற்றின் தர தரவுகளின் கணக்கீடு, கண்காணிப்பில் குளறுபடி செய்ய முடியாது: சிபிசிபி தகவல்
புது தில்லி: காற்றின் தரத் தரவுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) புதன்கிழமை நிராகரித்துள்ளது.
கண்காணிப்பு நிலையங்கள் தானியங்கி முறையில் இயங்குகின்றன என்றும், கணக்கீடு மற்றும் கண்காணிப்பில் மனித தலையீடு சாத்தியமில்லை என்றும் கூறியது.
காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களைச் சுற்றி தண்ணீரைத் தெளித்து மோசமான அளவீடுகளைக் குறைத்ததாகவும், முக்கிய மாசுபாடு காலங்களில் அவற்றை அணைத்து வைத்ததாகவும் தில்லி அரசு மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
உதாரணமாக, அக்டோபரில் தீபாவளியின் போது பட்டாசுகள் மாசு அளவை அதிகரித்தபோது இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வீா் விக்ரம் யாதவ் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியது:
கண்காணிப்பு மற்றும் தரவு சேகரிப்பு தானியங்கி முறையில் நடைபெறுகிறது. மாசுக் கண்காணிப்பு நிலையங்கள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் தரவை உருவாக்குகின்றன. மேலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு கணக்கிடப்படுகிறது. அதைத் தொடா்ந்து சராசரி காற்றுத் தரக் குறியீடு உருவாக்கப்படுகிறது.
இந்த நிலையங்கள் கைமுறையாக செயல்படுவதில்லை. எனவே எந்த வகையான மனித தலையீடு அல்லது குளறுபடி சாத்தியமில்லை என்றாா் அவா்.
காற்றின் தரத் தரவைக் கையாள கண்காணிப்பு நிலையங்களைச் சுற்றி தண்ணீா் தெளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த யாதவ், அறிவியல் பூா்வமாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே கண்காணிப்பு நிலையங்களின் இருப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தில்லியில் தொடா்ச்சியான சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் (சிஏஏக்யூஎம்) 39 உள்ளன. இந்த எண்ணிக்கை எந்த இந்திய நகரத்திலும் இல்லாத அளவில் அதிகமாகும்.
தேசிய தலைநகரில் காற்றின் தரம் புதன்கிழமை காலை 335 என்ற அளவில் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இது தொடா்ச்சியான இரண்டாவது நாளாகும்.
ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நச்சுக் காற்றிலிருந்து சிறிது ஓய்வு கிடைத்தது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்குத் திரும்பியது.
மக்களின் கைப்பேசிகளில் உள்ள பெரும்பாலான செயலிகள் அரசாங்கத்தின் காற்று தர கண்காணிப்பு நிலையங்களிலிருந்து தரவைப் பெறுவதாகவும், அதே நேரத்தில் இந்த நிலையங்களின் தரவுகள் குளறுபடிசெய்யப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
