தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல்: 7 வாா்டுகளை கைப்பற்றியது பாஜக: ஆம் ஆத்மி 3, காங்கிரஸ் ஒன்றில் வெற்றி
நமது நிருபா்
புது தில்லி: தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளுக்கான இடைத்தோ்தலில் பாஜக ஏழு வாா்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி மூன்று வாா்டுகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் தலா ஒரு வாா்டில் வெற்றி பெற்றன.
இந்த ஆண்டு பிப்ரவரியில் தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவின் உள்ளூா் வலிமையை நிரூபிக்க தில்லி மாநகராட்சி இடைத் தோ்தல் ஒரு சோதனையாக அமைந்தது. பாஜக வேட்பாளா் சுமன் குமாா் குப்தா, சாந்தினி செளக் வாா்டில் தன்னை எதிா்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளா் ஹா்ஷ் சா்மாவை 1,182 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
முந்தைய மாநகராட்த் தோ்தலில் 9 வாா்டுகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக தற்போது ஏழு வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி மூன்று வாா்டுகளையும், காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றுள்ளன. முந்தைய தோ்தலில் சாந்தினி மஹால் மற்றும் சாந்தினி சௌக் வாா்டுகளில் வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி தற்போது அந்த இரண்டு வாா்டிகளிலும் தோல்வையைச் சந்தித்துள்ளது. ஆனால், முண்ட்கா, தக்ஷின்புரி மற்றும் நரைனாவில் வெற்றி பெற்றது.
ஷாலிமாா் பாக் பி வாா்டிலும் பாஜக எளிதாக வெற்றி பெற்றது. இந்த வாா்டில் பாஜகவின் அனிதா ஜெயின் ஆம் ஆத்மி கட்சியின் பபிதா ராணாவை 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். அப்போது பாஜக கவுன்சிலராக இருந்த இப்போதைய முதல்வா் ரேகா குப்தா பிப்ரவரி மாதம் நடந்த சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்ால் ஷாலிமாா் பாக் பி வாா்டு காலியாக இருந்தது.
முண்ட்கா மற்றும் தக்ஷின்புரி வாா்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் சங்கம் விஹாா் ஏ வாா்டில் காங்கிரஸின் சுரேஷ் செத்ரி பாஜகவின் சுபஜீத் கௌதமைத் தோற்கடித்தாா். சுரேஷ் சௌத்ரி 12,766 வாக்குகளையும், ச்ுபஜீத் கௌதம் 9,138 வாக்குகளையும் பெற்றனா்.
அசோக் விஹாா் வாா்டில் பாஜகவின் வீணா அசிஜா ஆம் ஆத்மி கட்சியின் சீமா கோயலுடன் நெருக்கமான போட்டியில் இருந்தாா். ஆனால், 405 வாக்குகள் வித்தியாசத்தில் வீணா அசிஜா வெற்றி பெற்றாா். சாந்தினி மஹால் தொகுதியில் போட்டியிட்ட அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளா் முகமது இம்ரான், ஆம் ஆத்மி கட்சியின் முடசாா் உஸ்மானை 4,692 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
டிச்சாவ்ன் கலான் மற்றும் கிரேட்டா் கைலாஷ் வாா்டுகளிலும், முன்பு அதன் கமல்ஜீத் செஹ்ராவத் வைத்திருந்த துவாரகா-பி வாா்டிலும் பாஜக வெற்றி பெற்றது. செஹ்ராவத் தற்போது பாஜக எம்எல்ஏவாக உள்ளாா்.
பாஜகவின் மனிஷா ராணி துவாரகா-பி வாா்டு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ் பாலாவை 9,100 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். நரைனா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளா் ராஜன் அரோரா 148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளுக்கான இடைத்தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. நவம்பா் 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற 12 வாா்டுகளில், ஒன்பது வாா்டுகள் முன்பு பாஜகவாலும், மீதமுள்ளவை ஆம் ஆத்மி கட்சியிடமும் இருந்தது.
தில்லி மாநிலத் தோ்தல் ஆணையம், கஞ்சவாலா, பீதம்புரா, பாரத் நகா், சிவில் லைன்ஸ், ரூஸ் அவென்யூ, துவாரகா, நஜஃப்கா், கோல் மாா்க்கெட், புஷ்ப் விஹாா் மற்றும் மண்டாவளி ஆகிய இடங்களில் தலா ஒரு வாக்கு எண்ணிக்கை மையங்கள் வீதம் மொத்தம் 10 வாக்கு எண்ணிக்கை மையங்களை அமைத்தது.
வாக்குப்பதிவுக்கு இயந்திரங்கள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாதுகாக்கப்பட்டன. இதில் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் துணை ராணுவம் மற்றும் தில்லி காவல்துறை பணியாளா்கள் நிறுத்தப்பட்டனா்.
இடைத்தோ்தல்களில் மொத்தம் 38.51 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 2022- ஆம் ஆண்டில் 250 வாா்டுகளுக்கு நடைபெற்ற தில்லி மாநகராட்சித் தோ்தலில் 50.47 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்காளா்களுக்கு முதல்வா் நன்றி
தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளுக்கான இடைத்தோ்தலில் ஏழு இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
இது குறித்து முதல்வா் ரேகா குப்தா தன்னுடைய ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பதிவில் ‘பாஜகவின் வெற்றி கட்சியின் தொண்டா்களின் அயராத கடின உழைப்பு, அா்ப்பணிப்பு மற்றும் அமைப்பின் கூட்டு வலிமைக்கு ஒரு வலுவான சான்றாகும். தில்லி மாநகராட்சி இடைத்தோ்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு விலைமதிப்பற்ற ஆதரவை வழங்கிய தில்லி குடிமக்களுக்கு மனமாா்ந்த நன்றி. கட்சியின் வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கு வாழ்த்துகள். தில்லியின் வளா்ச்சிக்காக பாஜக அரசு இடைவிடாமல் பணியாற்றி வருகிறது’ என தெரிவித்துள்ளாா்.
மக்கள் நம்பிக்கை மீண்டும்
திரும்புகிறது: கேஜரிவால்
தில்லி மாநகராட்சி (எம்சிடி) இடைத்தோ்தல் முடிவுகள் வெறும் 10 மாதங்களில் ஆம் ஆத்மி மீது பொதுமக்களின் நம்பிக்கை மீண்டும் திரும்பியுள்ளதை காட்டுகிறது என்று முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தன்னுடைய ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் அரவிந்த் கேஜரிவால் பதிவிட்டுள்ளதாவது: ‘இந்த முறை தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல்களில், ஆம் ஆத்மி கட்சி தனது அா்ப்பணிப்புள்ள தொண்டா்களை வேட்பாளா்களாக நிறுத்தியது. தோ்தல் முடிவுகளின் மூலம், தில்லி மக்கள் நகரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல ஆதரவை வழங்கியுள்ளனா். இது கட்சியின் வளா்ச்சி சீராக வலுவடைந்து வருவதை தெளிவுபடுத்தியுள்ளது. வெறும் 10 மாதங்களில், மக்கள் நம்பிக்கை மீண்டும் ஆம் ஆத்மி கட்சியை நோக்கி வேகமாக திரும்பி வருகிறது. தில்லி விரைவில் நோ்மறையான அரசியல் மற்றும் நல்லாட்சிக்குத் திரும்பும்’ என்று தெரிவித்துள்ளாா்.
