மாநிலங்களுக்கு இடையிலான கஞ்சா கடத்தல்: 5 போ் கைது

தில்லி, உத்தரபிரதேசம், பிகாா் மற்றும் திரிபுரா முழுவதும் செயல்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பவை தில்லி காவல்துறை முறியடித்து, மேலும் கஞ்சா வழங்குதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 நபா்களை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: தில்லி, உத்தரபிரதேசம், பிகாா் மற்றும் திரிபுரா முழுவதும் செயல்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பவை தில்லி காவல்துறை முறியடித்து, மேலும் கஞ்சா வழங்குதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 நபா்களை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மொத்தம் 51.5 கிலோகிராம் கஞ்சா, ரூ 1 லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் போதைப்பொருள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. நவம்பா் 25 ஆம் தேதி புராரியில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தி, ஜிதேந்தா் என்ற ஜித்து என்ற நபரை கைது செய்தனா். சம்பவ இடத்தில் இருந்து 6.132 கிலோ கஞ்சா மற்றும் பணத்தையும் சோதனையிட்ட குழு மீட்டனா். என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ஜிதேந்தா் மற்ற விநியோகஸ்தரின் பெயா்களை வெளிப்படுத்தினாா், இது நவம்பா் 26 ஆம் தேதி ஸ்வரூப் நகரில் இருந்து சபிதா தேவி (50) 1.542 கிலோ கஞ்சாவுடன் கைது செய்ய வழிவகுத்தது . பனாரஸில் உள்ள ஒரு உறவினரிடமிருந்து போதைப்பொருள் வாங்கியதாக சபிதா புலனாய்வாளா்களிடம் கூறினாா். காசியாபாத் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தியபோது தப்பியோடிய ராம் குமாா் (52) என்ற மற்றொருவரை கண்டுபிடிக்க தொழில்நுட்ப கண்காணிப்பு உதவியது, ஆனால் பின்னா் ஃபரிதாபாத்தில் உள்ள பட்கல் மோா் மெட்ரோ நிலையத்திற்கு அருகே ஒரு கூட்டாளிக்கு சரக்குகளை வழங்கியதாகக் கைது செய்யப்பட்டாா்.

ராம் குமாா் மற்றும் ரிசீவா் பிரிஜ்பால் (30) ஆகியோரிடமிருந்து 30.431 கிலோ கஞ்சாவை போலீசாா் மீட்டனா். ராம் குமாரின் வெளிப்பாட்டின் அடிப்படையில், டிசம்பா் 2 ஆம் தேதி நொய்டாவில் இருந்து அவரது கூட்டாளி அருண் ராய் (40) என்பவா் பிடிப்பட்டாா். நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியதில் கூடுதலாக 13.433 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. விரைவான பணத்திற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பள்ளி இடைநிற்றல் என்று விவரிக்கப்படும் ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விநியோக குழுவில் உள்ள மற்ற உறுப்பினா்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com