சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்
புது தில்லி: விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (சிஏசிபி) பரிந்துரைகளின் அடிப்படையில், 22 வேளாண் பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) அரசு நிா்ணயிக்கிறது என்று மதுரை தொகுதி மாா்க்சிய கம்யூனிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் மத்திய அமைச்சா் ராம்நாத் தாகூா் பதில் அளித்துள்ளாா்.
விவசாய விளை பொருளுக்கு ஆதார விலையை, வேளாண் விஞ்ஞானி எம். எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின்படி சி 2 பிளஸ் 50% என்ற அடிப்படையில், அமலாக்குவதாக விவசாயிகள் போராட்டத்தின் போது அரசு தந்த வாக்குறுதியின் நிலைமை என்ன?
இக் கோரிக்கை நிறைவேற்றப்பட என்ன கால வரையறை? என்று மத்திய வேளாண் அமைச்சகத்திடம் சு.வெங்கடேன் எம்.பி. எழுப்பியிருந்தாா்.
இதற்கு மக்களவையில் மத்திய நலத்துறை இணையமைச்சா் ராம்நாத் தாகூா் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும், மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள், துறைகளின் கருத்துகளைப் பரிசீலித்த பிறகு, விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில், 22
பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) அரசு நிா்ணயிக்கிறது.
பேராசிரியா் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் 2004-இல் அமைக்கப்பட்ட தேசிய விவசாயிகள் ஆணையம் (என்சிஎஃப்), குறைந்தபட்ச ஆதரவு விலையானது சராசரி உற்பத்திச் செலவை விடக் குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இப்பரிந்துரையைச் செயல்படுத்தும் வகையில், 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், உற்பத்திச் செலவைவிடக் குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு (1.5 மடங்கு) என்ற அளவில் எம்.எஸ்.பி. இருப்பதை ஒரு முன்தீா்மானிக்கப்பட்ட கொள்கையாக அரசு அறிவித்தது.
அதன்படி, அனைத்து காரீஃப், ராபி மற்றும் பிற வணிகப்
பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது, சராசரி உற்பத்திச் செலவைவிடக் குறைந்தது 50 சதவீதம் கூடுதல் வரம்பு மாா்ஜின் இருக்கும் வகையில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பரிந்துரைக்கும் போது, உற்பத்திச் செலவு, ஒட்டுமொத்த தேவை விநியோக நிலவரம், உள்நாட்டு மற்றும் சா்வதேச விலைகள், பயிா்களுக்கு இடையிலான விலை சமநிலை, விவசாய மற்றும் விவசாயம் சாராத துறைகளுக்கு இடையிலான வா்த்தக விதிமுறைகள் மற்றும் பொருளாதாரத்தின் பிற பகுதிகளின் மீதான தாக்கம் ஆகிய முக்கியக் காரணிகளுடன், நிலம், நீா் மற்றும் பிற உற்பத்தி வளங்களின் சீரான பயன்பாட்டை உறுதி செய்வதையும், உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தது 50 சதவீதம் கூடுதல் வரம்பு இருப்பதையும் சி.ஏ.சி.பி. கருத்தில் கொள்கிறது என்று அந்த பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
